search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் இன்று பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
    X

    டெல்லியில் இன்று பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

    டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை 11 மணி அளவில் சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் இருவரும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசினார்கள்.
    புதுடெல்லி:

    எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக கடந்த பிப்ரவரி மாதம் 27-ந்தேதி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார்.

    அதன்பிறகு ஏப்ரல் மாதம் 23-ந்தேதி மீண்டும் டெல்லியில் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அதன் பிறகே டி.டி.வி.தினகரன் மீது புதிய வழக்கு பாய்ந்தது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் டெல்லி செல்வதாக தகவல் வெளியானது. அதன்படி பிரதமர் மோடியை 3-வது முறையாக சந்திப்பதற்காக எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு 7.40 மணிக்கு விமானம் மூலம் டெல்லி சென்றார்.

    அவரை தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் தங்கமணி, தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோரும் டெல்லி சென்றனர்.

    இன்று காலை 11 மணி அளவில் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் இருவரும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசினார்கள். பிறகு எடப்பாடி பழனிசாமி, தமிழக வறட்சி நிவாரணம் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட தமிழக பிரச்சனைகள் தொடர்பான கோரிக்கை மனுவை பிரதமரிடம் அளித்தார்.

    எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்தித்த போது தலைமை செயலாளரோ அல்லது அமைச்சரோ யாரும் உடன் இல்லாமல் தனியாக பேசினார்கள்.


    ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசிய நிலையில் அடுத்த சில தினங்களில் எடப்பாடி பழனிசாமி மோடியை சந்தித்து இருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அ.தி.மு.க.வின் பெயர், சின்னம் முடக்கப்பட்ட நிலையில் அதை மீட்பதற்காக அ.தி.மு.க. அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தை தொடங்காத நிலையில் அது தோல்வியில் முடிந்தது.

    இந்த நிலையில் இரு அணி தலைவர்களும் மத்திய அரசின் ஆதரவை பெறுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இது தொடர்பாகத்தான் சமீபத்தில் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்தித்தார். அவரைத் தொடர்ந்து இப்போது எடப்பாடி பழனிசாமியும் சந்தித்து பேசி இருப்பதாக கூறப்படுகிறது.

    ஜூலை மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பா.ஜனதாவுக்கு அ.தி.மு.க.வின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த சமயத்தில் அ.தி.மு.க.வின் இரு அணி தலைவர்களும் போட்டி போட்டு பா.ஜனதாவை ஆதரிக்க முன் வந்துள்ளனர். இதன் மூலம் மத்திய அரசின் ஆதரவை பெறலாம் என்று திட்டமிட்டுள்ளனர்.

    மேலும் சி.பி.ஐ., வருமான வரி சோதனை என்று அடுக்கடுக்கான நெருக்கடிகளையும் தமிழகம் சந்தித்து வருகிறது. இதில் இருந்து காத்துக் கொள்ளவும் மத்திய அரசின் தயவு தேவைப்படுவதாகவும் எனவேதான் சந்திப்புகள் நடைபெறுவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
    Next Story
    ×