search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பினாமி சொத்து பரிமாற்ற விவகாரம்: லாலு மகள் நிறுவனத்தின் ஆடிட்டர் கைது
    X

    பினாமி சொத்து பரிமாற்ற விவகாரம்: லாலு மகள் நிறுவனத்தின் ஆடிட்டர் கைது

    பினாமி சொத்து பரிமாற்ற விவகாரத்தில் லாலுபிரசாத் யாதவ் மகளுக்கு சொந்தமாக இருந்த நிறுவனத்தின் ஆடிட்டரை அமலாக்கத்துறை கைது செய்தது.
    பாட்னா:

    பினாமி சொத்து பரிமாற்ற விவகாரத்தில் லாலுபிரசாத் யாதவ் மகளுக்கு சொந்தமாக இருந்த நிறுவனத்தின் ஆடிட்டரை அமலாக்கத்துறை கைது செய்தது.

    ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவின் மகள் மிசா பாரதி, டெல்லி மேல்-சபை எம்.பி.யாக இருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குவது, பினாமி சொத்துகள் பரிமாற்றம் உள்ளிட்ட முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன. அதனால் சமீபத்தில், லாலு, மிசா பாரதி சம்பந்தப்பட்ட 22 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக, மிசா பாரதிக்கு சொந்தமாக இருந்த ஒரு நிறுவனத்தின் ஆடிட்டரான ராஜேஷ் அகர்வால் நேற்று கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்தது.

    இதுகுறித்து பீகார் மாநில முன்னாள் துணை முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    லாலு மகள் மிசா பாரதி நிறுவனங்களில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன. அப்படிப்பட்ட நிலையில் வருமான வரி சோதனை நடப்பது இயல்பானதுதான். அவர் தனக்கு சொந்தமான ஒரு நிறுவனத்தின் பங்குகளை அதன் முக மதிப்பை விட 10 மடங்குக்கு மேல் விலை வைத்து ஜெயின் சகோதரர்களிடம் விற்றார்.

    பிறகு அதே பங்குகளை அதன் உண்மையான மதிப்புக்கு வாங்கினார். இதன்மூலம், கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றினார். அந்த கருப்பு பணம், லாலுபிரசாத் யாதவ், கால்நடைத்தீவன ஊழலில் சம்பாதித்த பணம் ஆகும்.

    வெள்ளையாக மாற்றிய பணத்தைக் கொண்டு, டெல்லியில் முக்கிய இடத்தில் ஒரு பண்ணை வீட்டை மிசா பாரதி வாங்கினார்.

    மிசா பாரதி கருப்பு பணத்தை வெள்ளை ஆக்க உதவிய ஜெயின் சகோதரர்கள், ரூ.8 ஆயிரம் கோடி சட்டவிரோத பண பரிமாற்றத்தில் தொடர்புடையவர்கள். அதனால் அவர்களை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. தற்போது, மிசா பாரதிக்கு சொந்தமாக இருந்த ஒரு நிறுவனத்தின் ஆடிட்டர் ராஜேஷ் அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மிசா பாரதிக்கு எதிராக வருமான வரி சோதனை நடந்தபோது, அதுபோன்ற சோதனையே நடக்கவில்லை, பா.ஜனதா வதந்தியை பரப்பி வருகிறது என்று லாலுபிரசாத் யாதவ் கூறினார்.

    வருமான வரி சோதனை நடக்காவிட்டால், ஆடிட்டர் எப்படி கைது செய்யப்பட்டார் என்பதை லாலுபிரசாத் விளக்குவாரா? ஆடிட்டர் கைதின் மூலம் லாலுபிரசாத் யாதவின் சந்தேகங்களுக்கு விடை கிடைத்திருக்கும்.

    இவ்வாறு சுஷில் குமார் மோடி கூறினார். 
    Next Story
    ×