search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் ரெயில்வே துறை கம்ப்யூட்டர்களை அட்டாக் செய்த ’ரான்சம்வேர்’
    X

    கேரளாவில் ரெயில்வே துறை கம்ப்யூட்டர்களை அட்டாக் செய்த ’ரான்சம்வேர்’

    கேரளாவில் ரெயில்வே துறை அலுவலகத்தில் உள்ள 6 கம்ப்யூட்டர்களை ரான்சம்வேர் தாக்கியுள்ளதாகவும், முக்கிய தகவல்கள் ஏதும் பாதிக்கப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ரெயில்வே துறை அலுவலகத்தில் உள்ள 6 கம்ப்யூட்டர்களை ரான்சம்வேர் தாக்கியுள்ளதாகவும், முக்கிய தகவல்கள் ஏதும் பாதிக்கப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    டெக் உலகின் அசுரர்களாக சமீபத்தில் உருவெடுத்த ’வான்னாக்ரை’ ஹேக்கிங் குழுவினர் இ-மெயில் மூலமாக ஹேக்கிங் மால்வேரை ஒருவரது கம்ப்யூட்டருக்கு அனுப்புகின்றனர். கம்ப்யூட்டரை இயக்கும் நபர் விபரமின்றி அந்த இ-மெயிலை திறக்கும் போது அந்த மால்வேரானது கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களை ஹேக் செய்து விடுகிறது.

    குறிப்பிட்ட அளவு பணம் தரும் பட்சத்தில் திருடப்பட்ட தகவல்களை திரும்ப அளிப்போம், இல்லையெனில் அந்த தகவல்களை அழித்துவிடுவோம் எனவும் அக்குழுவினர் எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளனர். இந்த ‘ரான்சம்வேர்’ வைரஸின் தாக்குதலுக்கு உலகமுழுவதுமுள்ள மருத்துவமனைகள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்கள் தப்பவில்லை.

    அனைத்து நாடுகளிலும் உள்ள இணைய பாதுகாப்பு அமைப்புகள் இத்தாக்குதலில் இருந்து எப்படி தப்பிப்பது என்பது குறித்த வழிமுறைகளை வெளியிட்டு வருகின்றன. இருப்பினும் இந்த வைரஸ் தாக்குதலால் பல்லாயிரக்கான நிறுவனங்கள் தங்களது வழக்கமான பணிகளை நிறுத்தி வைத்துள்ளதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய்களை இழந்துள்ளது.

    இந்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரம் கோட்ட ரெயில்வே அலுவலகங்களில் உள்ள 6 கம்ப்யூட்டர்கள் ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. கணக்கு தணிக்கை பிரிவின் கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் முக்கியமான ஆவணங்கள் எதும் திருடப்படவில்லை எனவும் தெற்கு ரெயில்வே விளக்கமளித்துள்ளது.

    வழக்கமான ரெயில்வே பணிகள் இதனால் பாதிக்கப்படவில்லை எனவும், தொழில்நுட்ப குழுவினர் கம்ப்யூட்டர்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, கேரளாவில் உள்ள பஞ்சாயத்து அலுவலகங்களில் கம்ப்யூட்டர்களில் ரான்சம்வேர் தாக்கியது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×