search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொச்சி மெட்ரோ ரெயில் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் - முதல்-மந்திரி தகவல்
    X

    கொச்சி மெட்ரோ ரெயில் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் - முதல்-மந்திரி தகவல்

    கொச்சி மெட்ரோ ரெயில் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.
    திருவனந்தபுரம்:

    கொச்சி மெட்ரோ ரெயில் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.

    கேரள மாநிலம் கொச்சியில் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான பணிகள் முடிவடைந்து விட்டன. இத்திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என்று கேரள அரசு ஏற்கனவே கூறியிருந்தது. எனினும், “இத்திட்டத்தின் தொடக்க விழாவை இந்த மாத இறுதியில் பிரதமர் மோடி, ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருக்கும் போது நடத்தி முடிக்க கேரள இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு விரும்புகிறது” என்று மாநில பா.ஜனதா தலைவர் கும்மனம் ராஜசேகரன் குற்றம் சாட்டினார். இந்த நிலையில், கேரள சட்டப்பேரவையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆலுவா தொகுதி எம்.எல்.ஏ. அன்வர் சதத் கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியதாவது:-

    கொச்சி மெட்ரோ ரெயில் திட்டத்தை பிரதமர் மோடிதான் தொடங்கி வைப்பார். அது தொடர்பாக எந்த சந்தேகமும் தேவையில்லை. இத்திட்டத்தை பிரதமர் தொடங்கி வைப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று பிரதமர் அலுவலகத்திடம் நாங்கள் தெரிவித்து உள்ளோம்.

    இந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகத்துடன் நாங்கள் தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம். பிரதமரின் ஒப்புதல் கிடைத்த பிறகு மெட்ரோ ரெயில் தொடக்க விழாவுக்கான தேதி முடிவு செய்யப்படும். இத்திட்டத்தின் தொடக்க விழா குறித்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. அதற்கான தேதியை அரசு முடிவு செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    கொச்சி மெட்ரோ ரெயில் திட்டமானது நூற்றுக்கணக்கான பெண்கள் மட்டுமின்றி, திருநங்கையர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் பணிவாய்ப்புகளை வழங்கி, பாலின சமத்துவத்தில் புதிய சரித்திரம் படைக்க உள்ளது. இத்திட்டத்தின் முதல் கட்டத்தில் ஆலுவா முதல் பாலாரிவட்டம் வரை இயக்கப்பட உள்ள ரெயில்களில் மாநில அரசின் ‘குடும்பஸ்ரீ’ திட்டத்தில் பயிற்சி பெற்ற 600 பெண்களுக்கு பணிவாய்ப்பு அளிக்கப்படும்.

    இதேபோல், மூன்றாம் பாலினத்தை சேர்ந்த திருநங்கைகள் 23 பேருக்கு பயணச்சீட்டு வழங்குவது முதல் துப்புரவு பணி வரை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. அவர்களும் ‘குடும்பஸ்ரீ’ திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×