search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக பொதுச்செயலாளர் நியமன விவகாரம்: தேர்தல் கமி‌ஷனில் சசிகலா கூடுதல் ஆவணம் தாக்கல்
    X

    அதிமுக பொதுச்செயலாளர் நியமன விவகாரம்: தேர்தல் கமி‌ஷனில் சசிகலா கூடுதல் ஆவணம் தாக்கல்

    அதிமுக பொதுச்செயலாளர் நியமன விவகாரத்தில் தேர்தல் கமிஷனிடம் சசிகலா அணியினர் 12,752 பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளனர். ஒவ்வொரு ஆவணத்திலும் மாவட்ட நிர்வாகிகளின் கையெழுத்து உள்ளது.
    புதுடெல்லி:

    முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவி காலியாக இருந்தது. எனவே, கட்சியின் பொதுக்குழு கூட்டப்பட்டு சசிகலா பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.

    அதை தொடர்ந்து முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் அவர் திடீரென சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.

    முதல்-அமைச்சர் பதவியை தானாக முன் வந்து ராஜினாமா செய்யவில்லை என்றும், கட்டாயப்படுத்தி ராஜினாமா பெறப்பட்டதாகவும் தெரிவித்தார். இதனால் அ.தி.மு.க.வில் பிரச்சனை ஏற்பட்டது.

    கட்சி ஓ.பன்னீர்செல்வம் அணியாகவும், சசிகலா அணியாகவும் 2 ஆக பிளவு பட்டது. ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து சசிகலா நீக்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ.பன்னீர் செல்வம் அணியினர் சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்தது செல்லாது. தொண்டர்களின் வாக்குகள் மூலமே பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என தலைமை தேர்தல் கமி‌ஷனில் மனு தாக்கல் செய்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலா அணியினரும் தேர்தல் கமி‌ஷனில் மனு செய்தனர்.

    அந்த மனு மீது தலைமை தேர்தல் கமி‌ஷனர் நஜீம் ஜைதி விசாரணை நடத்தினார். அப்போது சசிகலா தரப்பில் 1991 பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.


    அதே போன்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பு அணியினரும் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர்.

    இதற்கிடையே மேலும் ஆவணங்கள் தாக்கல் செய்ய தலைமை தேர்தல் ஆணையம் கூடுதல் கால அவகாசம் வழங்கியது. அதை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் அணி கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்தது.

    இந்த நிலையில் சசிகலா தரப்பில் இன்று டெல்லியில் தலைமை தேர்தல் கமி‌ஷனில் 12,752 பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் மாவட்ட நிர்வாகிகள் கையெழுத்து உள்ளது. ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரங்களில் பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்து இருந்தது. இன்று பிரமாண பத்திரங்களை சசிகலா தரப்பு வக்கீல்கள் தாக்கல் செய்தனர்.
    Next Story
    ×