search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2-வது முறை ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜிக்கு நிதிஷ்குமார் ஆதரவு
    X

    2-வது முறை ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜிக்கு நிதிஷ்குமார் ஆதரவு

    பிரணாப் முகர்ஜியை மீண்டும் ஜனாதிபதியாக்க ஐக்கிய ஜனதா தள தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
    பாட்னா:

    ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிகாலம் ஜூலை 25-ந் தேதியுடன் முடிகிறது. அதற்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுகிறது.

    புதிய ஜனாதிபதியாக ஆர்.எஸ்.எஸ்.அமைப்பை சேர்ந்த ஒருவரை தேர்வு செய்ய பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முயன்று வருகிறது.

    காங்கிரஸ் தலைமையில் எதிர்கட்சியினர் பொதுவான வேட்பாளரை நிறுத்துவது பற்றி தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
    பிரணாப்முகர்ஜியை 2-வது முறையாக ஜனாதிபதியாக இடது சாரிகள் கூட்டணி எற்கனவே ஆதரவு தெரிவித்து இருந்தன. சோனியா காந்தியை சந்தித்த போது மார்க்சிஸ்டு பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி இதை வலியுறுத்தி இருந்தார்.

    இந்த நிலையில் பிரணாப் முகர்ஜியை மீண்டும் ஜனாதிபதியாக்க ஐக்கிய ஜனதா தள தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார் ஆதரவு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக பாட்னாவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜனாதிபதி என்பவர் ஒட்டு மொத்த நாட்டு மக்களின் பிரதிநிதியாவார். எனவே மத்தியில் உள்ள ஆளும் கட்சி இந்த உயர்ந்த பதவிக்கான வேட்பாளர் தேர்தலில் அனைத்து கட்சிகளிடமும் பேச வேண்டும்.

    தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர் குறித்து எதிர்கட்சிகளிடமும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டும். இப்படி செய்வதுதான் ஆளும்கட்சியின் கடமை என்று நான் கூறவில்லை. அதே சமயம் இத்தகைய முயற்சியை எடுக்கலாம் என்று வலியுறுத்துகிறேன்.


    பிரணாப்முகர்ஜியை 2-வதுமுறையாக ஜனாதிபதி பதவியில் அமர்த்துவது என்பது சிறப்பான முடிவாக இருக்கும்.
    ஒரு மித்த கருத்துடன் பிரணாப்முகர்ஜியை மீண்டும் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிட வைத்தால் அதைவிட சிறந்த முன்னுதாரணம் வேறு எதுவும் இருக்கப்போவதில்லை.

    இவ்வாறு நிதிஷ்குமார் கூறினார்.

    மேலும் அவர் கூறும் போது, “2019 பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை. அரசியல் யதார்த்தங்களை புரிந்து கொண்டவன்” என்றார்.
    Next Story
    ×