search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர் எல்லையில் அத்துமீறல்: பாகிஸ்தான் தாக்குதலில் பெண் பலி
    X

    காஷ்மீர் எல்லையில் அத்துமீறல்: பாகிஸ்தான் தாக்குதலில் பெண் பலி

    ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கணவர் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.
    ஜம்மு:

    பாகிஸ்தான் ராணுவமும், தீவிரவாதிகளும் காஷ்மீர் எல்லையில் கடந்த சில தினங்களாக அதிக வாலாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் இரு இந்திய வீரர்களின் தலையைத் துண்டித்து பாகிஸ்தான் ராணுவத்தினர் மிகவும் கோழைத்தனமான செயலில் ஈடுபட்டனர். அதற்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயாராகி வருகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை காஷ்மீர் மாநிலம் ராஜோரி மாவட்ட எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கடும் அத்துமீறலில் ஈடுபட்டனர். எல்லையோர கிராமங்கள் மீது சிறு ரக பீரங்கிக் குண்டுகளால் தாக்குதல் நடத்தினார்கள்.

    நவ்ஷேரா செக்டார் பகுதியில் இந்த அத்துமீறல் நடந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் அந்த எல்லைப் பகுதிக்கு கூடுதல் ராணுவ வீரர்கள் விரைந்தனர்.



    பாகிஸ்தான் ராணுவ வீரர்களை நோக்கி இந்திய தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்பட்டது. நீண்ட நேரம் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.

    இந்திய வீரர்களின் தாக்குதல் அதிகமானதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பின் வாங்கிச் சென்றனர். அதன் பிறகே நவ்ஷேரா செக்டாரில் உள்ள மக்கள் வீடுகளில் இருந்து வெளியில் வந்தனர்.

    அப்போது பாகிஸ்தானின் பீரங்கி தாக்குதலில் ஒரு வீட்டுக்குள் பெண் பலியாகி கிடப்பது தெரிய வந்தது. அவரது கணவர் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

    அவரை ராணுவ வீரர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பாகிஸ்தானின் அத்துமீறலைத் தொடர்ந்து நவ்ஷேரா செக்டார் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
    Next Story
    ×