search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த மற்ற கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரா? - சரத் யாதவ் தகவல்
    X

    ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த மற்ற கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரா? - சரத் யாதவ் தகவல்

    ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. நிறுத்தும் வேட்பாளரை தோற்கடிக்க மற்ற கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முயற்சித்து வருவதாக ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை 25-ம் தேதியுடன் முடிகிறது. அதற்கு முன்னர் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜ.க அறிவிக்கும் வேட்பாளரைத் தோற்கடிக்க பொது வேட்பாளரைத் தேர்தலில் நிறுத்த எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்றன.

    அதன் ஒரு கட்டமாக ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் சரத் யாதவ், சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். இதுகுறித்து சரத் யாதவ் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலில் உத்தரபிரதேச சட்டப் பேரவைத் தேர்தலிலும், டெல்லியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் பா.ஜ.க அல்லாத வாக்குகள் பிரிந்தன. அதனால்தான் பா.ஜ.க.வால் வெற்றி பெற முடிந்துள்ளது. பா.ஜ.க பெற்ற வாக்குகளை விட, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரசின் மொத்த வாக்குகள் அதிகம்.

    எனவே, இந்த நாட்டை பா.ஜ.க முழுவதும் ஆக்கிரமிப்பதைத் தடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதற்கு எதிர்க்கட்சிகளுக்குள் ஒற்றுமை ஏற்பட வேண்டும். அதற்கு ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுத்தால், பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்றிணைவதற்கு ஒரு தொடக்கமாக இருக்கும்.

    இந்த கருத்தின்படி எதிர்க்கட்சிகள் சேர்ந்த பொது வேட்பாளரை அறிவிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்காக ஜனாதிபதி தேர்தலில் எல்லா எதிர்க் கட்சியினரையும் ஒன்று சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.

    இவ்வாறு சரத்யாதவ் கூறினார்.

    ‘‘எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக யாரை நிறுத்த திட்டம்?’’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சரத் யாதவ் பதில் அளிக்கும்போது, ‘‘முதலில் எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்று சேர்க்க வேண்டும். அதன்பிறகுதான்    வேட்பாளர் யார் என்பது குறித்து பரிசீலிக்க முடியும்’’ என்று கூறினார்.
    Next Story
    ×