search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி மாநகராட்சி தேர்தல்: தவறுகள் செய்ததால் தோல்வி அடைந்தோம் - கெஜ்ரிவால் ஒப்புதல்
    X

    டெல்லி மாநகராட்சி தேர்தல்: தவறுகள் செய்ததால் தோல்வி அடைந்தோம் - கெஜ்ரிவால் ஒப்புதல்

    நடந்து முடிந்த டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சில தவறுகள் செய்ததால் தோல்வியை தழுவியது என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    டெல்லியில் சமீபத்தில் நடந்த மாநகராட்சி தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்தது. பாரதீய ஜனதா அமோக வெற்றி பெற்றது. டெல்லியில் உள்ள 3 மாநகராட்சியையும் தொடர்ந்து 3-வது முறையாக கைப்பற்றியது.

    மொத்தம் உள்ள 270 வார்டுகளில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியால் 48 இடங்களை தான் கைப்பற்ற முடிந்தது.

    தேர்தல் தோல்வியால் கெஜ்ரிவால் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார். மின்னணு வாக்கு எந்திரம் மீது குற்றம்சாட்டி இருந்த அவர் தோல்வி குறித்து கடந்த சில தினங்களாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார்.

    இந்த நிலையில் தவறுகள் செய்ததால் தேர்தலில் தோற்றதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக டுவிட்டரில் அவர் கூறியதாவது:-

    கடந்த 2 தினங்களாக நான் கட்சி தொண்டர்கள், மற்றும் வாக்காளரிடம் பேசினேன். அப்போது உண்மையான வெளிப்படைகள் தெரிந்தது. ஆம் ஆத்மி கட்சி சில தவறுகள் செய்துவிட்டன. இதை ஒப்புக் கொள்கிறேன். தேர்தல் தோல்வி குறித்து சுய பரிசோதனை செய்ய வேண்டும். அதற்கு இதுதான் சரியான நேரம்.

    மிகவும் கடினமாக உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மன்னிப்பு கொடுக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். சில மாற்றங்களை கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஊழலுக்கு எதிராக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேயுடன் இணைந்து கெஜ்ரிவால் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது தான் 2012-ம் ஆண்டில் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியை உருவாக்கினார்.

    2015-ம் ஆண்டு டெல்லியில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 67 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. ஏற்கனவே பஞ்சாப், கோவா, தேர்தலை அந்த கட்சி தோற்றது. தற்போது டெல்லி மாநகராட்சி தேர்தலிலும் தோற்றது. கெஜ்ரிவால் கடுமையான விரக்தியில் இருக்கிறார்.
    Next Story
    ×