search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அன்னா ஹசாரே பா.ஜனதா ஏஜெண்டு: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
    X

    அன்னா ஹசாரே பா.ஜனதா ஏஜெண்டு: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    அன்னா ஹசாரே பாரதிய ஜனதாவின் ஏஜெண்டாக மாறி விட்டார் என்பதை நான் வலுவாக நம்புகிறேன் என்று டெல்லி துணை முதல் மந்திரியும், கட்சியின் மூத்த தலைவருமான மனீஷ் சிசோடியா அன்னா ஹசாரேக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    சமூக சேவகர் அன்னா ஹசாரே ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை தொடங்கி போராட்டம் நடத்திய போது, கெஜ்ரிவாலும் அவருடன் சேர்ந்து செயல்பட்டு வந்தார்.

    ஆனால், கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியை தொடங்கி அரசியலில் இறங்கியது அன்னா ஹசாரேவுக்கு பிடிக்கவில்லை. எனவே, அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதில் இருந்து அன்னா ஹசாரே அடிக்கடி கெஜ்ரிவாலை விமர்சித்து வருகிறார். டெல்லியில் நடைபெறும் ஆம் ஆத்மி ஆட்சி பற்றியும் விமர்சிக்கிறார்.

    சமீபத்தில் டெல்லியில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆம் ஆத்மி படுதோல்வியை சந்தித்தது. இது சம்பந்தமாக அன்னா ஹசாரே கருத்து வெளியிட்டார். அதில், ஆம் ஆத்மியினர் டெல்லியில் ஆட்சியை பிடிப்பதற்கு முன்பு கொடுத்த தேர்தல் வாக்குறுதிப்படி நடந்து கொள்ளவில்லை. ஆட்சிக்கு வந்ததும் அரசு பங்களா, அரசு கார் என அதன் மீது நாட்டம் செலுத்தினார்கள். எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தையும் அதிகப்படுத்தி கொண்டார்கள். இது, டெல்லி மக்களுக்கு பிடிக்கவில்லை.


    அவர்கள் ஆட்சிக்கு வந்த போது, ஏதோ பெரிய மாற்றத்தை கொண்டு வரப்போகிறார்கள் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர்கள் எதையும் செய்யவில்லை. அவர்களுக்கு அதிகார போதை ஏற்பட்டு விட்டது. எனவேதான் பஞ்சாப், உத்தரபிரதேசம் என பல மாநிலங்களிலும் அரசியல் செய்ய ஆரம்பித்தனர். மக்கள் அவர்களை நிராகரித்து விட்டனர். இதன் காரணமாகத்தான் டெல்லியில் தோல்வியை சந்தித்து இருக்கிறார்கள் என்று கூறினார்.

    அன்னா ஹசாரே இப்படி கடுமையாக விமர்சித்தது ஆம் ஆத்மி கட்சியினருக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து டெல்லி துணை முதல் மந்திரியும், கட்சியின் மூத்த தலைவருமான மனீஷ் சிசோடியா அன்னா ஹசாரேக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ளார். தனது டுவிட்டர் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ள அவர், எங்களை எல்லாம் கடந்த காலத்தில் அன்னா ஹசாரே வழிநடத்தி சென்றார். ஆனால், இன்று அவர் பாரதிய ஜனதாவின் ஏஜெண்டாக மாறி விட்டார் என்பதை நான் வலுவாக நம்புகிறேன் என்று கூறி உள்ளார்.

    இதற்கு முன்பு ஆம் ஆத்மி கட்சியை அன்னா ஹசாரே பல முறை விமர்சித்த போதிலும் கெஜ்ரிவாலோ, மற்றவர்களோ எதிர்கருத்து சொல்லாமல் இருந்தனர். ஆனால், இப்போது அன்னா ஹசாரேவை கடுமையாக விமர்சித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×