search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏழைகளிடம் கொள்ளையடித்தவர்களை தப்பவிட மாட்டோம்: பிரதமர் மோடி உறுதி
    X

    ஏழைகளிடம் கொள்ளையடித்தவர்களை தப்பவிட மாட்டோம்: பிரதமர் மோடி உறுதி

    ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும், ஏழைகளிடம் கொள்ளையடித்தவர்களை தப்பவிட மாட்டோம் என்று பிரதமர் மோடி கூறினார்.
    சிம்லா:

    பிரதமர் நரேந்திர மோடி, நேற்று இமாசலபிரதேச மாநில தலைநகர் சிம்லாவுக்கு சென்றார். அங்கு நடைபெற்ற பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    சிம்லாவில் எனது இளமைக்காலத்தை கழித்து இருக்கிறேன். குறிப்பாக, இங்குள்ள இந்தியன் காபி ஹவுசில் என்னுடைய பத்திரிகை நண்பர்களுடன் பொழுதை கழித்துள்ளேன். அப்போதெல்லாம் நான் குடிக்கும் காபிக்கு நான் காசு கொடுத்ததே இல்லை. எனது பத்திரிகை நண்பர்களே கொடுத்து விடுவார்கள்.

    இந்த மாநிலம், தேவ பூமி, வீர பூமி. சுற்றுலா தலங்கள் நிறைந்த பூமி. இங்கு சாலைகள், ரெயில்வே, விமான வழித்தடம் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு ஊக்கம் அளித்து வருகிறது.

    குளிர்பானத்தில் பழ ரசத்தை கலக்குமாறு பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதனால், இங்குள்ள பழ விவசாயிகள் பலன் அடைவார்கள்.

    காலம் மாறிவிட்டது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் அடித்த காற்று, இமாசலபிரதேசத்தில் நுழைந்து விட்டது. டெல்லியில் இருந்தும் புதிய காற்று வீசி வருகிறது. எனவே, இமாசலபிரதேசம் நேர்மையான சகாப்தத்துக்கு தயாராகி வருகிறது.

    ஒரு முதல்-மந்திரி (வீரபத்ரசிங்), வழக்குகளுக்காக தன்னுடைய வக்கீல்களுடன் பெரும்பாலான நேரத்தை செலவழித்து வருகிறார். அவரால் மக்களுக்கு எப்படி பாடுபட முடியும்? அவரது பெயர் உங்களுக்கே தெரியும்.

    ஊழலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுப்போம். ஏழைகளிடம் கொள்ளையடித்தவர்களை தப்பவிட மாட்டோம்.

    அதற்காக, ரொக்க பணத்தை குறைவாக பயன்படுத்தி, மின்னணு பண பரிமாற்றத்தை பின்பற்றுமாறு வலியுறுத்தி வருகிறோம்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    முன்னதாக நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், சிம்லா-டெல்லி இடையிலான மலிவு கட்டண விமான சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.


    கடப்பா-ஐதராபாத், நேன்டட்-ஐதராபாத் வழித்தடங்களிலும் மலிவு கட்டண விமான சேவையை காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.

    மத்திய அரசு அறிவித்த ‘பிராந்திய இணைப்பு திட்டத்தின்’ (உடான்) கீழ் இந்த விமான சேவைகள் தொடங்கப்படுகின்றன. ஒரு மணி நேரத்துக்கு அதிகபட்ச கட்டணம் ரூ.2 ஆயிரத்து 500 என்ற உச்சவரம்புடன் விமானங்களை இயக்குவதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். சிம்லா-டெல்லி விமானத்தில் பயணிகள் கட்டணம் ரூ.2 ஆயிரத்து 36 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    ரப்பர் செருப்பு அணிந்தவர்களும் விமானத்தில் செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த விமான கட்டணம், வாடகை கார் கட்டணத்தை விட குறைவு.

    இவ்வாறு அவர் பேசினார். 
    Next Story
    ×