search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செக் அளிக்கவில்லையெனில் திகார் சிறைக்கு அனுப்புவோம் - சஹாரா அதிபருக்கு சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை
    X

    செக் அளிக்கவில்லையெனில் திகார் சிறைக்கு அனுப்புவோம் - சஹாரா அதிபருக்கு சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை

    நிதி மோசடி வழக்கில் செபி அமைப்பிடம் வரும் ஜூன் 15-ம் தேதிக்குள் 1500 கோடி ரூபாய்க்கான செக் கொடுக்கவில்லையெனில் திகார் சிறைக்கு அனுப்புவோம் என சஹாரா குழும அதிபருக்கு சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
    புதுடெல்லி:

    சஹாரா குழுமத்திலுள்ள 2 நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட ரூ.25 ஆயிரம் கோடியைத் திருப்பி தராமல் மோசடி செய்துவிட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில், அந்த குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் கடந்த 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.

    இதனிடையே, சுப்ரதா ராயின் தாயார் கடந்த ஆண்டு மே மாதம் உயிரிழந்தார். இதையடுத்து சிறையில் இருந்து பரோலில் சுப்ரதா ராய் வெளியே வந்தார். அவரது பரோல் முதலில் நவம்பர் மாதம் வரையிலும், பிறகு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டது.

    கடைசியாக பரோலை நீட்டித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்போது, "செபி அமைப்பிடம் சஹாரா குழுமம் ரூ.600 கோடியை பிப்ரவரி 6-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்; இல்லையெனில் பரோல் நீட்டிக்கப்பட மாட்டாது' என்று தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வரும் ஜூன் 15-ம் தேதிக்குள் செபிக்கு ரூ 1500 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் எனவும், செலுத்த தவறும் பட்சத்தில் சுப்ரதா ராயை திகார் சிறைக்கு அனுப்ப நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றுக் கொண்ட சஹாரா தரப்பு வழக்கறிஞர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் காசோலையை செலுத்திவிடுவதாக உறுதியளித்தனர்.

    மேலும், அக்குழுமத்தில் முதலீடு செய்து ஏமாற்றமடைந்தவர்களுக்கு இழப்பீட்டு தொகையை வசூலிப்பதற்காக அக்குழுமத்திற்கு சொந்தமான ஆம்வே வேலி சொத்தை ஏலம் விடுவதற்கான நடைமுறைகளை தயார் செய்யுமாறு மும்பை ஐகோர்ட்டு அலுவலர்களை நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.

    இவ்வழக்கை வரும் ஜூன் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் அதுவரை சுப்ரதா ராயின் பரோலை நீட்டித்தும் உத்தரவிட்டனர்.
    Next Story
    ×