search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள ஐகோர்ட்டு உத்தரவால் 6 ஆண்டுகளுக்கு பின் லாட்டரி பரிசு தொகையை பெற்ற தமிழக பக்தர்
    X

    கேரள ஐகோர்ட்டு உத்தரவால் 6 ஆண்டுகளுக்கு பின் லாட்டரி பரிசு தொகையை பெற்ற தமிழக பக்தர்

    கேரள ஐகோர்ட்டு உத்தரவால் 6 ஆண்டுகளுக்கு பிறகு லாட்டரியில் விழுந்த முழு பரிசையும் பெறும் நிலை தமிழக பக்தரான ராதாகிருஷ்ணனுக்கு ஏற்பட்டு உள்ளது.
    திருவனந்தபுரம்:

    தமிழகத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர் ராதாகிருஷ்ணன்.

    அய்யப்ப பக்தரான இவர் கடந்த 2011-ம் ஆண்டு சபரிமலைக்கு புனித பயணம் சென்றார். அப்போது மூவாற்றுபுழா பகுதியில் உள்ள ஒரு கடையில் கேரள அரசின் லாட்டரி சீட்டு வாங்கினார். அந்த சீட்டுக்கு ரூ.40 லட்சம் பரிசு மற்றும் 50 பவுன் தங்க நகை பரிசு என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    லாட்டரி குலுக்கலில் இந்த பரிசு, தமிழக பக்தர் ராதாகிருஷ்ணனுக்கு கிடைத்தது. இதை அறிந்த ராதாகிருஷ்ணன் மகிழ்ச்சி அடைந்தார்.

    உடனே அவர் கேரளா சென்று பரிசு விழுந்த லாட்டரியை அதிகாரிகளிடம் கொடுத்து தனக்கான பரிசை கேட்டார். ஆனால் கேரள லாட்டரித்துறை அதிகாரிகள், தமிழக பக்தருக்கு பரிசு வழங்க அக்கறை காட்டவில்லை. அதற்கான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் மனம் உடைந்த ராதாகிருஷ்ணன் இது பற்றி உயர் அதிகாரிகளுக்கு பல முறை கடிதம் எழுதினார். ஆனால் அவர்கள் லாட்டரி சீட்டு உண்மையானது தானா? என விசாரிக்க வேண்டும், ராதாகிருஷ்ணனின் இருப்பிடம், கேரளா மாநிலத்திற்கு வெளியே இருப்பதால் அது பற்றி விரிவாக விசாரிக்க கேரள அரசு உத்தரவிட்டு இருக்கிறது என்று கூறிவந்தனர்.

    இதையடுத்து ராதாகிருஷ்ணன், இப்பிரச்சினையை கேரள ஐகோர்ட்டின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அதில் பரிசு விழுந்து இது வரை பரிசு தொகையும், 50 பவுன் தங்க நகையும் கிடைக்கவில்லை என்று கூறியிருந்தார்.

    இம்மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, கடந்த 2015-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இதில் பரிசு வென்ற ராதாகிருஷ்ணனுக்கு பரிசு தொகையையும், 50 பவுன் தங்க நகையையும் உடனே வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து கேரள லாட்டரி துறை அதிகாரிகள், தமிழக பக்தர் ராதாகிருஷ்ணனுக்கு பரிசு தொகையில் பிடித்தங்கள் போக ரூ.24½ லட்சம் பணம் வழங்கினர். ஆனால் 50 பவுன் தங்க நகை மட்டும் வழங்கவில்லை.

    இது பற்றி ராதாகிருஷ்ணன் மீண்டும் ஐகோர்ட்டின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, ராதாகிருஷ்ணனுக்கு 2 மாதத்திற்குள் 50 பவுன் தங்க நகை வழங்க வேண்டும். இல்லையேல் சம்பந்தப்பட்ட அதிகாரி பரிசு விழுந்த நாளில் இருந்து 10 சதவீத வட்டியுடன் அதற்கான தொகையை ரா`தாகிருஷ்ணனுக்கு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    இதன்மூலம் பரிசு விழுந்து 6 ஆண்டுகளுக்கு பிறகு முழு பரிசையும் பெறும் நிலை ராதாகிருஷ்ணனுக்கு ஏற்பட்டு உள்ளது.
    Next Story
    ×