search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் கட்சியிலிருந்து என்னை வெளியேற்ற சித்தராமையா முயற்சி: முன்னாள் அமைச்சர் விஸ்வநாத்
    X

    காங்கிரஸ் கட்சியிலிருந்து என்னை வெளியேற்ற சித்தராமையா முயற்சி: முன்னாள் அமைச்சர் விஸ்வநாத்

    காங்கிரஸ் கட்சியிலிருந்து என்னை வெளியேற்ற முதல் மந்திரி சித்தராமையா முயற்சித்து வருகிறார் என முன்னாள் கர்நாடக கூட்டுறவு துறை அமைச்சர் எச். விஸ்வநாத், நேற்று தனது ஆதரவாளர்கள் கூட்டத்தில் புலம்பியுள்ளார்.
    ஓசூர்:

    கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அடகூரூ எச்.விஸ்வநாத், எஸ்.எம். கிருஷ்ணா மந்திரிசபையில் கூட்டுறவு துறை அமைச்சராக பதவி வகித்தவர். மேலும் மைசூரு நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யாகவும் அவர் பணியாற்றி உள்ளார்.

    இந்த நிலையில், மைசூரு மாவட்டம் கே.ஆர். நகரில் நேற்று விஸ்வநாத் ஆதரவாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய விஸ்வநாத், ‘‘சித்தராமையாவை காங்கிரஸ் கட்சிக்கு அழைத்து வந்து அவரை முதல் மந்திரி ஆக்கினேன். ஆனால் அவர் என்னையே கட்சியிலிருந்த வெளியேற்ற துடித்துக்கொண்டிருக்கிறார்.

    அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். நான் ராஜிவ் காந்தி, சோனியா காந்தி.. காலம் முதல் காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக பணியாற்றி வருகிறேன். ஆனால் இன்று அரசியல் அனுபவமில்லாத ராகுல் காந்தி மற்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் திக்விஜய் சிங்,, போன்றோர் என் மீது தேவையற்ற புகார்களை சுமத்தி, கட்சியிலிருந்து வெளியே செல்லும் நிலைமைக்கு தள்ளியுள்ளனர். இப்படிப்பட்ட கட்சியில் நான் தொடர வேண்டுமா? என்பதை நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள்.. என்று ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார்.

    இக்கூட்டத்தில், மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் துணைத்தலைவர் சென்னபசப்பா, தாலுகா பஞ்சாயத்து தலைவர் மஞ்சுநாத், முன்னாள் நகரசபை தலைவர் தம்மநாயக்.. உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பின்னர் விஸ்வநாத், பா.ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகரும், எச்.டி.கோட்டே தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சிக்கண்ணாவை சந்தித்து நீண்ட நேரம் ரகசியமாக பேசினார். பின்னர் இந்த சந்திப்பு குறித்து அவர் கூறுகையில், சிக்கண்ணாவும் நானும் நீண்ட கால நண்பர்கள். அந்தவகையில் அவரிடம் மனம் விட்டு பேசினேன். இதற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம்.. என்றார்.

    இதனிடையே எச். விஸ்வநாத் மதசார்பற்ற ஜனதா தள கட்சியில் சேரப்போவதாகவும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் உன்சூரு தொகுதியில் அவர் போட்டியிடப்போவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
    Next Story
    ×