search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீண்டும் வன்முறை: காஷ்மீரில் பேஸ்புக், வாட்ஸ்அப்-க்கு தடை
    X

    மீண்டும் வன்முறை: காஷ்மீரில் பேஸ்புக், வாட்ஸ்அப்-க்கு தடை

    காஷ்மீரில் மீண்டும் வன்முறை சம்பவம் எதிரொலியால் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப், உள்பட 22 சமூக வலை தளங்களை பயன்படுத்த அம்மாநில அரசு அதிரடியாக தடை செய்துள்ளது.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மீண்டும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. புல்வாமா மாவட்டம் அருகே சோதனை சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர்.

    இதன் தொடர்ச்சியாக போலீசை கண்டித்து பல்வேறு கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கல்லூரிகளுக்கு 5 நாள் விடுமுறை விடப்பட்டது. விடுமுறைக்கு பிறகு கல்லூரி திறக்கப்பட்ட போது ஸ்ரீநகரில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பாதுகாப்பு படையினருக்கும், மாணவர்களுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.



    பாதுகாப்பு படையினர் மீது கல்வீசி தாக்கும் பிரிவினைவாதிகளின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி வன்முறை தாக்குதலை நிகழ்த்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இதையடுத்து பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப், உள்பட 22 சமூக வலை தளங்களை காஷ்மீர் அரசு அதிரடியாக தடை செய்துள்ளது. 22 சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஒரு மாதம் அல்லது மறுஉத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என்று அம்மாநில உள்துறை முதன்மை செயலாளர் ஆர்.கே. கோயல் தெரிவித்துள்ளார்.

    ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்திய டெலிகிராப் சட்டம் 1885 படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் நலனை கருத்தில் கொண்டு சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டு உள்ளதாகவும் காஷ்மீர் மாநில அரசு தெரிவித்துள்ளது.
    Next Story
    ×