search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி நகராட்சி தேர்தல்: மோடி தலைமைக்கு கிடைத்த வெற்றி - அமித்ஷா
    X

    டெல்லி நகராட்சி தேர்தல்: மோடி தலைமைக்கு கிடைத்த வெற்றி - அமித்ஷா

    டெல்லி நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பிரதமர் மோடி தலைமைக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    டெல்லி மாநகராட்சி முன்பு ஒரே மாநகராட்சியாக இருந்தது. 2012-ம் ஆண்டு வடக்கு, தெற்கு, கிழக்கு என 3 மாநகராட்சியாக பிரிக்கப்பட்டது.

    டெல்லியில் உள்ள 3 மாநகராட்சிகளுக்கான தேர்தல் கடந்த 23-ந்தேதி நடந்தது. இந்த 3 மாநகராட்சிகளிலும் மொத்தம் 272 வார்டுகள் உள்ளன. வடக்கு டெல்லி மற்றும் தெற்கு டெல்லி மாநகராட்சியில் தலா 104 வார்டுகளும், கிழக்கு டெல்லியில் 64 வார்டுகளும் உள்ளன.

    இதில் 2 வார்டுகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. 270 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடந்தது. தெற்கு டெல்லியில் 104 வார்டுகளுக்கும், வடக்கு டெல்லியில் 103 வார்டுகளுக்கும், கிழக்கு டெல்லியில் 63 வார்டுகளுக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது. மொத்தம் 54 சதவீத வாக்குப்பதிவாகி இருந்தது.

    டெல்லி மாநகராட்சி தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்பட்டன. ஓட்டு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே பா.ஜனதா முன்னிலையில் இருந்து வந்தது. நேரம் செல்ல செல்ல அந்த கட்சி அதிகமான இடங்களில் முன்னிலை பெற்றது.

    ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகியவற்றை பின்னுக்கு தள்ளிவிட்டு டெல்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது.

    மொத்தம் உள்ள 270 வார்டுகளில் பாரதிய ஜனதா 180 இடங்களை கைப்பற்றி அசைக்க முடியாத வெற்றியை பெற்றது. ஆம் ஆத்மி கட்சி முதலில் 3-வது இடத்தில் இருந்தது. பின்னர் காங்கிரசை பின்னுக்கு தள்ளி முன்னேறியது. அந்த கட்சி 45 வார்டுகளில் வெற்றி பெற்று 2-வது இடத்தை பிடித்தது. காங்கிரஸ் 35 வார்டுகளையும், மற்ற கட்சிகள் 10 வார்டுகளையும் கைப்பற்றின.

    டெல்லியில் உள்ள 3 மாநகராட்சியையும் பா.ஜனதா கைப்பற்றியது. தொடர்ந்து 3-வது முறையாக ‘ஹாட்ரிக்‘ வெற்றி பெற்று சாதனை படைத்தது.

    டெல்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதா வெற்றி குறித்து அதன் தலைவர் அமித்ஷா கூறியதாவது:-



    டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவு பிரதமர் மோடியின் தலைமைக்கு கிடைத்த வெற்றியாகும். இதற்காக டெல்லி மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். எதிர் மறை அரசியல் நடத்துபவர்களுக்கு எதிராக மக்கள் வாக்ககளித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×