search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகராட்சி தேர்தலில் பா.ஜ.க. அபார வெற்றி: டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் ராஜினாமா
    X

    நகராட்சி தேர்தலில் பா.ஜ.க. அபார வெற்றி: டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் ராஜினாமா

    டெல்லிக்கு உட்பட்ட மூன்று நகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த தோல்விக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் அறிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகவும் நாட்டின் தலைநகராகவும் திகழும் டெல்லி பகுதியை நிர்வாக ரீதியாக மூன்று நகராட்சிகளாக பிரித்து மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அவ்வகையில், வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு டெல்லி நகராட்சிகளுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக கடந்த 22-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

    வடக்கு டெல்லியில் உள்ள 104 வார்டுகள் தெற்கு டெல்லியில் உள்ள 104 வார்டுகள் மற்றும் கிழக்கு டெல்லியில் உள்ள 64 வார்டுகள் என மொத்தமுள்ள 272 வார்டுகளில் 270 வார்டுகளுக்கு மட்டும் புதிய பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்காக நடைபெற்ற தேர்தலில் 53.58 சதவீதம் வாக்குகள் பதிவானது.

    மத்தியில் ஆளும் பா.ஜ.க., டெல்லி ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளர்களை தவிர பல சுயேட்சை வேட்பாளர்களின் தலைவிதியை நிர்ணயிக்கவுள்ள இந்த தேர்தலுக்காக சுமார் 13 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.


    இந்நிலையில், நகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆரம்பத்திலிருந்தே மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை சேர்ந்த வேட்பாளர்கள் மூன்று நகராட்சிகளிலும் முன்னிலை வகித்து வந்தனர்.

    பகல் 12 மணி நிலவரப்படி வடக்கு டெல்லியில் உள்ள 57 வார்டுகளிலும், தெற்கு டெல்லியில் உள்ள 61 வார்டுகளிலும் கிழக்கு டெல்லியில் உள்ள 43 வார்டுகளிலும் பா.ஜ.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மேலும், மூன்று நகராட்சிகளுக்கு உட்பட்ட 25-க்கும் அதிகமான இடங்களில் இக்கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி முகத்தில் உள்ளனர்.

    இந்த வெற்றியை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைக்கும் அவர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் அடையாளமாக பார்ப்பதாக பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

    கடைசியாக கிடைத்த தகவலின்படி, ஆம் ஆத்மி வேட்பாளர்கள் இரண்டாவது இடத்திலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் மூன்றாவது இடத்திலும் பின்தங்கியுள்ளனர். இந்த தேர்தல் முடிவுகள் பற்றி கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் இது மோடி அலையின் ஏழுச்சியால் கிடைத்த வெற்றி அல்ல; வாக்குப்பதிவு இயந்திரங்களில் செய்யப்பட்ட தில்லுமுல்லால் வந்த வெற்றி என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

    வரலாறு காணாத இந்த படுதோல்வியால் டெல்லியில் உள்ள காங்கிரஸ் மேலிட தலைவர்களும், தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில்,இந்த தோல்விக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அஜய் மக்கான், ‘கட்சிப் பணியில் சுதந்திரமாக செயல்பட அனுமதி அளித்த காங்கிரஸ் தலைமைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    எங்களுக்கு சொந்தமான வாக்குவங்கியை நாங்கள் தக்கவைத்து கொண்டுள்ளதாகவே இந்த முடிவுகள் உணர்த்துகின்றன. எனினும், இந்த தோல்விக்கு பொறுப்பேற்று டெல்லி பிரதேச காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்.

    இன்னும் ஓராண்டுக்கு எவ்வித பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளாமல் ஒழுக்கமான ஒரு போர் வீரனாக கட்சியை மேலும் பலப்படுத்தும் விதத்தில் பணியாற்றுவேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×