search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓட்டலை அபகரித்ததாக ப.சிதம்பரம் உறவுப்பெண் மீது டாக்டர் புகார்: சி.பி.ஐ.க்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீசு
    X

    ஓட்டலை அபகரித்ததாக ப.சிதம்பரம் உறவுப்பெண் மீது டாக்டர் புகார்: சி.பி.ஐ.க்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீசு

    ஓட்டல் அபகரிப்பு தொடர்பாக பி.சிதம்பரம் உறவுப்பெண் மீது டாக்டர் கதிர்வேல் கொடுத்த புகார் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய நிலவர அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீசு வழங்கியுள்ளது
    புதுடெல்லி:

    திருப்பூரில் ‘கம்பர்ட் இன்’ என்ற ஓட்டலை டாக்டர் கதிர்வேல் என்பவர், தன் நண்பர்களுடன் கூட்டாக நடத்தி வந்தார். 2007-ம் ஆண்டு, இந்த ஓட்டலை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் சகோதரி பத்மினி அபகரித்து விட்டதாக டெல்லி ஐகோர்ட்டில் கதிர்வேல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

    இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நான் ரூ.2 கோடியே 50 லட்சம் கடன் பாக்கி வைத்திருந்தேன். அதை வாராக்கடனாக அறிவித்து, ஓட்டலை ஏலம் விடுவதாக வங்கி நிர்வாகம் அறிவித்தது. ஏலத்தை தவிர்க்க நான் ரூ.64 லட்சம் செலுத்தியதும், ஏலத்தை கைவிடுவதாக வங்கி நிர்வாகம் கூறியது. ஆனால், போலியாக ஏலம் நடத்தி, ரூ.10 கோடி மதிப்புள்ள அந்த ஓட்டலை வெறும் ரூ.4 கோடியே 50 லட்சத்துக்கு பத்மினிக்கு வங்கி நிர்வாகம் ஒதுக்கிவிட்டது. வங்கி அதிகாரிகள் மற்றும் நளினி சிதம்பரத்தின் துணையுடன் எனது சொத்தை பத்மினி அபகரித்து விட்டார்.

    இதுதொடர்பாக, ப.சிதம்பரம் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீதான எனது புகாரை சி.பி.ஐ.யின் தமிழக பிரிவு ஏற்க மறுத்ததால், சி.பி.ஐ. இயக்குனரிடம் புகார் கொடுத்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த மனு, நீதிபதி ஆர்.கே.கவுபா முன்பு விசாரணைக்கு வந்தது. கதிர்வேல் புகார் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய நிலவர அறிக்கையை ஜூலை 25-ந் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். 
    Next Story
    ×