search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திராவில் வெயில் தாக்கம் அதிகரிப்பு: கர்ப்பிணிகள், முதியோர் வெளியே நடமாட வேண்டாம்
    X

    ஆந்திராவில் வெயில் தாக்கம் அதிகரிப்பு: கர்ப்பிணிகள், முதியோர் வெளியே நடமாட வேண்டாம்

    ஆந்திராவில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், அந்த நேரத்தில் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் வெளியே நடமாட வேண்டாம் என்று கலெக்டர் எச்சரிக்கை எடுத்துள்ளார்.
    சித்தூர்:

    ஆந்திராவில் கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. சித்தூர் மாவட்டத்தில் 110 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைக்கிறது. திருப்பதி, காளஹஸ்தி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

    இந்த நிலையில் கோடை வெயிலை சமாளிப்பது எப்படி? என்பது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் வெளியீட்டு விழா மாவட்ட மருத்துவத்துறை சார்பில் சித்தூரில் நடந்தது.

    விழாவில் கலெக்டர் பிரதியும்ணா கலந்து கொண்டு, விழிப்புணர்வு சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்களை வெளியிட்டு பேசுகையில்:-

    ஆந்திராவில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதேபோல் சித்தூர் மாவட்டத்திலும் வெயில் கடுமையாக உள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் கொடூரமாக உள்ளது. வெயில் அதிகமாக இருக்கும் நேரத்தில் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் யாரும் வெளியே நடமாட வேண்டாம், என எச்சரிக்கை விடுத்துப் பேசினார்.



    மாவட்ட மருத்துவத்துறை முதன்மை அதிகாரி டாக்டர் விஜயகவுரி பேசியதாவது:-

    கோடை வெயிலை சமாளிப்பது எப்படி? என்பது குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய 12 லட்சம் சுவரொட்டிகளும், துண்டு பிரசுரங்களும் அச்சிடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள அங்கன்வாடி மையங்கள் மூலமாக பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது.

    அத்துடன் பொதுமக்களுக்கு ஆரஞ்சு ஜூஸ் பாட்டில்களும் வழங்கப்படும். பொதுமக்கள் காலை 10 மணியில் இருந்து மாலை 4 மணிவரை வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம்.

    அப்படி தவிர்க்க முடியாத பட்சத்தில் வெளியே வருவோர் தங்களின் தலையில் தொப்பிப் போட்டுக்கொண்டும். குடை பிடித்துக் கொண்டும் செல்ல வேண்டும். கையில் தண்ணீர் பாட்டில்களை கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும். யாருக்காவது வெயிலின் தாக்கத்தால் தலை சுற்றல், மயக்கம் வந்தால் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட ஜில்லா பரி‌ஷத் தலைவர் கீர்வாணி, மாவட்ட வருவாய்த் துறை அதிகாரி ரஜியாபேகம், இணை கலெக்டர் கிரீஷ், கூடுதல் இணை கலெக்டர் வெங்கடசுப்பாரெட்டி, சித்தூர் மண்டல வருவாய் அதிகாரி கோதண்டராமரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×