search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    16 லட்சம் கருவிகள்: யாருக்கு ஓட்டுப்போட்டோம் என்ற குழப்பத்தை போக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை
    X

    16 லட்சம் கருவிகள்: யாருக்கு ஓட்டுப்போட்டோம் என்ற குழப்பத்தை போக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை

    யாருக்கு ஓட்டுப்போட்டோம் என்பதை வாக்காளர்கள் உறுதி செய்ய உதவும் 16 லட்சத்து 15 ஆயிரம் கருவிகள் வாங்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து உள்ளது.
    புதுடெல்லி:

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மீதான நம்பகத்தன்மை சந்தேகத்துக்கு உரியதாக இருப்பதாகவும், எனவே தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையையே பயன்படுத்த வேண்டும் என்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து உள்ளன. இது தொடர்பாக சமீபத்தில் 16 எதிர்க்கட்சி தலைவர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர்.

    ஆனால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி செய்ய முடியாது என்று ஏற்கனவே உறுதியாக கூறி வரும் தேர்தல் கமிஷன், மின்னணு வாக்குப்பதிவு முறையின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் புதிய கருவி ஒன்றை வைக்க தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்து வருகிறது. ஏற்கனவே சில தொகுதிகளில் நடந்த தேர்தல்களில் பரீட்சார்த்த முறையில் இந்த புதிய கருவி பயன்படுத்தப்பட்டு உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்காளர் பொத்தானை அழுத்தி ஓட்டுப்போட்டு முடித்ததும், அவர் யாருக்கு ஓட்டுப்போட்டார் என்பதை இந்த கருவியில் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.


    வருகிற 2019-ம் ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த கருவியை பயன்படுத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்து உள்ளது.

    இதற்காக 16 லட்சத்து 15 ஆயிரம் கருவிகள் வாங்க தீர்மானித்துள்ள தேர்தல் கமிஷன் இதற்கு நிதி ஒதுக்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொண்டது. அதை ஏற்று மத்திய அரசு ரூ.3 ஆயிரத்து 173 கோடியே 47 லட்சம் வழங்க சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

    இந்த கருவிகளை மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தயாரித்து வழங்கும் பாரத் மின்னணு நிறுவனம் (பி.இ.எல்.), இந்திய மின்னணு கழகம் (இ.சி.ஐ.எல்.) ஆகியவற்றிடம் இருந்து வாங்க தேர்தல் கமிஷன் முடிவு செய்து உள்ளது.

    இது தொடர்பாக அந்த நிறுவனங்களுக்கு தேர்தல் கமிஷன் கடிதம் எழுதி இருக்கிறது. 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் 8 லட்சத்து 7 ஆயிரத்து 500 கருவிகளை வாங்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

    இந்த தகவலை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ள தேர்தல் கமிஷன், இந்த கருவிகள் தாங்கள் ஒப்புதல் அளித்த வடிவமைப்பு மற்றும் தங்கள் தொழில்நுட்ப குழு தெரிவித்த சிபாரிசுகளின்படி தயாரிக்கப்படும் என்றும் அதில் கூறி இருக்கிறது.

    இந்த கருவியின் மூலம் தேர்தலில் வெளிப்படைதன்மை அதிகரிக்கும் என்றும், யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் உரிமையை வாக்காளர் பெறுவதாகவும் தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி தெரிவித்தார்.
    Next Story
    ×