search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லைசென்ஸ் இல்லாமல் லாரியை ஓட்டி 15 பேரை கொன்ற டிரைவர்: பரபரப்பு தகவல்
    X

    லைசென்ஸ் இல்லாமல் லாரியை ஓட்டி 15 பேரை கொன்ற டிரைவர்: பரபரப்பு தகவல்

    திருப்பதி அருகே லைசென்ஸ் இல்லாத டிரைவர் மது போதையில் லாரியை ஓட்டியதில் ஏற்பட்ட விபத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 15 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    திருப்பதி:

    திருப்பதி அடுத்த முனகல பாளையம் கிராமத்தில் ஓடும் சொர்ணமுகி ஆற்றுப் பகுதியில் மணல் கொள்ளை நடக்கிறது. இதனை தடுத்து நிறுத்தக்கோரி அந்த பகுதி மக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில், மணல் கொள்ளையை தடுக்கக் கோரி முனகலபாளையம் கிராம மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஏர்பேடு போலீஸ் நிலையம் முன்பு நேற்று போராட்டம் நடத்தினர்.

    அப்போது, பாஸ்பேட் தாது லோடுடன் திருப்பதியில் இருந்து காளஹஸ்தி நோக்கி சென்றுக் கொண்டிருந்த லாரி, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து போராட்ட களத்திற்குள் புகுந்து தாறுமாறாக ஓடியது.

    பின்னர் அங்கிருந்த மின் கம்பத்தை இடித்துக் கொண்டு சாலையோர கடைக்குள் புகுந்து நின்றது. இந்த விபத்தில் மின்கம்பம் சாய்ந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்தும், லாரியில் அடிபட்டும் 15 பேர் பலியாகினர்.

    முனகலபாளையத்தை சேர்ந்த சரஸ்வதி (வயது 71), கங்காதர நாயுடு (58), ஜெயச் சந்திரா (32), பாஸ்கரய்யா (65), முனிகிருஷ்ண நாயுடு (67) மற்றும் அவரது மகன் கோதண்டபாணி (37), வசந்தா (30), முனியய்யா நாயுடு (65), சுமதி (45), ராஜேந்திரா (36), பிரபாவதி (62), நாகேஸ்வரராவ் (63), சுதாகர் (65), ஹரி (45), பத்தையா (45).


    மேலும் 30-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயமடைந்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய்நாத், சப்-இன்ஸ்பெக்டர் ராம கிருஷ்ணா, நாளிதழ் ஒன்றின் செய்தியாளர் பாலமுரளி உள்ளிட்டோரும் படுகாயமடைந்தனர்.

    10-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன. காயம் ஏற்பட்டவர்கள் திருப்பதியில் உள்ள ரூயா, சிம்ஸ், காளஹஸ்தி உள்பட பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

    பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பதி ரூயா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தகோர விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் குருவய்யா (வயது 36) மற்றும் கிளீனரை போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில், லாரி டிரைவர் மது அருந்திவிட்டு லாரியை ஓட்டியதால் விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது. மேலும் லாரி டிரைவர் 4 சக்கர வாகனம் ஓட்டுவதற்கான லைசென்ஸ் மட்டுமே வைத்திருந்தார்.

    18 சக்கரங்களை கொண்ட அந்த லாரியை இயக்குவதற்கான, ‘ஹெவி’ லைசென்ஸ் அவரிடம் இல்லை. எனவே, 15 பேர் உயிரை பறிக்க காரணமான லாரி டிரைவர் மீது கொலைக்கு நிகரான வழக்குகளை பதிய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    ஒரே கிராமத்தை சேர்ந்த 15 பேர் விபத்தில் பலியாகி இருப்பதால், பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

    இந்த விபத்து குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களின் மருத்துவ செலவை அரசே ஏற்றுக் கொள்ளும் எனவும் ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

    Next Story
    ×