search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீரிகளை வெளியேறச் சொல்லி பேனர்கள்: உ.பி. நவநிர்மாண் சேனா தலைவர் மீது வழக்கு
    X

    காஷ்மீரிகளை வெளியேறச் சொல்லி பேனர்கள்: உ.பி. நவநிர்மாண் சேனா தலைவர் மீது வழக்கு

    காஷ்மீர் மக்களை வெளியேறும்படி பேனர்கள் வைத்தது தொடர்பாக உத்தர பிரதேச நவநிர்மாண் சேனா தலைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    மீரட்:

    ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றபோது, பிரிவினைவாத அமைப்புகள் தேர்தலை புறக்கணிக்கும்படி பொதுமக்களை வலியுறுத்தினர். அத்துடன் வாக்குப்பதிவு நடைபெற விடாமல் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்கினர். இதில், பத்காம் மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக சென்ற வீரர்கள் மீது இளைஞர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தின் வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் பரவியது. இந்த செயலுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது.

    இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் காஷ்மீர் மக்களுக்கு எதிராக நவநிர்மாண் சேனா சார்பில் மிகப்பெரிய பேனர்களும், விளம்பர பலகைகளும் வைக்கப்பட்டன.

    குறிப்பாக பர்த்தாபூர் பைபாஸ் சாலையில், காஷ்மீர் மாணவர்கள் படிக்கும் கல்லூரிகளுக்கு வெளியே இதுபோன்ற பேனர்கள் வைக்கப்பட்டன. அதில், காஷ்மீர் மக்கள் உத்தர பிரதேசத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.

    இதற்கு கடும் விமர்சனங்களும் எதிர்ப்புகளும் வலுத்துள்ள நிலையில், பேனர்கள் வைத்தது தொடர்பாக நவநிர்மாண் சேனாவின் உத்தரபிரதேச மாநில தலைவர் அமித் ஜானி மீது போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சர்ச்சைக்குரிய பேனர்களும் அகற்றப்பட்டன.
    Next Story
    ×