search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு: டெல்லி காங்கிரஸ் மகளிர் அணி தலைவி கட்சியில் இருந்து ஆறாண்டுகள் நீக்கம்
    X

    ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு: டெல்லி காங்கிரஸ் மகளிர் அணி தலைவி கட்சியில் இருந்து ஆறாண்டுகள் நீக்கம்

    அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டுகளை சுமத்திய டெல்லி காங்கிரஸ் மகளிர் அணி தலைவி கட்சியில் இருந்து ஆறாண்டுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    டெல்லி பிராந்தியத்துக்கான காங்கிரஸ் மகளிர் அணி தலைவி பர்க்கா சுக்லா சிங். அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியின் டெல்லி தலைவர் அஜய் மக்கான் மீது அடுக்கடுக்காக குற்றம் சுமத்தி இருந்தார்.

    ராகுல் காந்தி மற்றும் அஜய் மக்கான் ஆகியோரின் தலைமையின்கீழ் இயங்கிவரும் காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக உழைத்து வருவதாக கூறப்படும் அடிப்படை கொள்கை தொடர்பாக கேள்வி எழுப்பிய இவர், பெண்களிடம் இருந்து வாக்குகளை பெறுவதற்காகவே காங்கிரஸ் இப்படி கூறிவருவதாக பர்க்கா சுக்லா சிங் நேரடியாக குற்றம்சாட்டினார்.

    தற்போதைய நிலவரப்படி கட்சிக்குள் எனக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவும்போது, பெண்களுக்கு இவர்கள் எப்படி அதிகாரம் அளிக்கப் போகிறார்கள்? என்றும் கேள்வி எழுப்பியிருந்த  பர்க்கா சுக்லா சிங், காங்கிரஸ் கட்சியின் இந்தப் போலித்தனத்தை எதிர்த்து கட்சியின் டெல்லி மகளிர் அணி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் இவ்விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதற்காக பர்க்கா சுக்லா சிங்கை ஆறாண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


    டெல்லி மாநகராட்சிக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் தலைமை மீது கருத்து வேறுபாடு கொண்டு சமீபத்தில் அக்கட்சியில் இருந்து வெளியேறிய இரண்டாவது நிர்வாகி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, டெல்லி பிரதேச காங்கிரஸ் தலைவர் லவ்லி சிங் என்பவர் அடிப்படை உறுப்பினர் உள்பட தனது அனைத்து பொறுப்புகளையும் ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் இணைந்தது நினைவிருக்கலாம்.
    Next Story
    ×