search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் ‘இந்திய விருந்து’!
    X

    சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் ‘இந்திய விருந்து’!

    சட்டம், அதிகாரம் கோலோச்சும் இடங்களில் ஒருவித இறுக்கம் நிலவும். ஆனால் அங்கேயும் வெளித்தெரியாத பல சுவையான, இனிமையான மரபுகள், நடைமுறைகள் பின்பற்றப்பட்டுத்தான் வருகின்றன.
    சட்டம், அதிகாரம் கோலோச்சும் இடங்களில் ஒருவித இறுக்கம் நிலவும். ஆனால் அங்கேயும் வெளித்தெரியாத பல சுவையான, இனிமையான மரபுகள், நடைமுறைகள் பின்பற்றப்பட்டுத்தான் வருகின்றன.

    அதற்கு உதாரணமாக, டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் இடம்பெற்றுவரும் ‘நீதிபதிகள் விருந்தை’க் குறிப்பிடலாம்.

    சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அனைவரும் ஒவ்வொரு புதன்கிழமையையும் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். அந்த தினத்தில் நடைபெறும், நீதிபதிகளுக்கு மட்டுமேயான ஸ்பெஷல் மதிய விருந்துதான் அவர்களின் எதிர்பார்ப்புக்குக் காரணம்.

    மற்ற நாட்களில் தத்தமது வீட்டில் இருந்து கொண்டுவந்த உணவை தமது சேம்பரில் தனியாகச் சாப்பிடும் 28 நீதிபதிகளும், புதன்கிழமைகளில் மட்டும் ஒரு ‘படா விருந்து’க்குத் தயாராகிவிடுகிறார்கள்.

    ஒவ்வொரு வாரமும் ஒரு நீதிபதி விருந்து பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார் என்பதும், உணவு வகைகளை ஓட்டலில் இருந்து வரவழைக்காமல், வீட்டு மணம் கமழ தத்தமது இல்லத்தில் இருந்தே கொண்டுவரச் செய்கின்றனர் என்பதும் இந்த விருந்தின் விசேஷங்கள்.

    புதன்கிழமைதோறும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மதியம் ஒரு மணி அடிப்பதற்கு 10 நிமிடம் முன்பே தத்தமது இருக்கையை விட்டு எழுந்துவிடுகின்றனர். அவரவர் சேம்பருக்கு சென்று ஆடை மாற்றிக்கொண்டு பொது டைனிங் ஹாலை நோக்கி விரைகின்றனர். அங்கு அவர்களுக்கு, சுவையான உணவு சூடாகக் காத்திருக்கிறது.

    ஓட்டலில் சாதாரணமாக சாப்பிடக்கூடிய உணவு வகைகள் அங்கு அணிவகுப்பதில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்க விஷயம். சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நீதிபதிகள் பணிபுரிவதால், தத்தமது மண் மணக்கும் உணவு வகைகளை சமைத்துக் கொண்டு வருகின்றனர்.

    உதாரணமாக, கேரளாவைச் சேர்ந்த நீதிபதி குரியன் ஜோசப் அளிக்கும் விருந்தில், கப்பை (மரவள்ளி) கிழங்கு, சிவப்பு அரிசி சாதம், அப்பளம், நேந்திரம் வாழைப்பழம் என்று மலையாள தேசத்தின் வாசம் தூக்கும்.

    ஆந்திராக்காரரான நீதிபதி செல்லமேஸ்வரின் முறை வரும்போது, சாதம், சாம்பர், ரசம், இட்லி, தோசை, வெண்பொங்கலுடன், ஆவக்காய் ஊறுகாயும், கொங்குரா பச்சடியும் நாசிகளை விசாரிக்கும்.

    நீதிபதி அருண் மிஸ்ராவின் வீட்டிலிருந்து உணவு வருகிறது என்றால் அதில் மத்தியபிரதேச பாரம்பரிய ருசி தெரியும்.

    ஆர்.கே.அகர்வாலின் வீட்டுக்காரர்களின் கைவண்ணத்தில் உத்தரப்பிரதேச உணவின் உன்னதம் புரியும்.

    உணவு தயாரிப்பில் மட்டுமல்ல, விருந்தோம்பலிலும் ஒவ்வொரு நீதிபதியும் ஏக சிரத்தை எடுத்துக்கொள்கிறார்கள். சக நீதிபதிகளின் வயிறுகளோடு, மனங்களையும் குளிர்விக்க வேண்டும் என்பதில் மிகவும் அக்கறையாக இருக்கிறார்கள்.

    நீதிபதிகள் வீட்டுப் பெண்மணிகள் மேற்பார்வையில்தான் மண் மணம் மாறாமல் உணவுகள் தயாராகின்றன. மாநிலச் சுவை மாறக்கூடாது என்பதற்காக அந்தந்தப் பகுதிகளில் இருந்தே சமையல் கலைஞர்களை வரவழைத்துச் சமைப்பதும் உண்டு.

    விருந்தின் பிரதான பிரிவில், குறைந்தபட்சம் ஐந்து உணவுவகைகள் இடம்பெறுகின்றன. பெரும்பாலான நீதிபதிகளுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டு, இதில் சேர்ப்பது உண்டு.

    நீதிபதிகளில் சைவர்கள், அசைவர்கள் உண்டு என்றபோதிலும், சைவ நீதிபதிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சுத்த சைவ உணவுகளை மட்டுமே பரிமாறுவது என்ற பொதுவிதியை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

    ஓய்வு பெற்ற நீதிபதி குல்தீப் சிங்கின் ஆலோசனையில் பிறந்ததே, இந்த வாராந்திர மதிய விருந்து. அவரது யோசனையின்பேரில்தான் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் இவ்விருந்து தொடங்கியிருக்கிறது.

    அதைப் பற்றிக் கேட்டாலே பழைய நினைவுகளில் மூழ்கிப்போகிறார், குல்தீப் சிங்...

    “இந்த விருந்தின் முக்கிய நோக்கமே, சிறிது நேரமாவது வேலையை மறந்து ரிலாக்ஸ் ஆக வேண்டும் என்பதுதான். எனவே நாங்கள் சேம்பரில் எங்களின் நீதிபதி ஆடையை கழற்றி மாட்டும்போதே வேலை பற்றிய நினைவுகளையும் கழற்றிவிடுகிறோம். தனிப்பட்ட முறையில், எனக்கு தென்னிந்திய உணவுகள் மிகவும் பிடிக்கும்” என்கிறார்.

    இவரைப் போல மற்றொரு தென்னிந்திய உணவுப் பிரியர், மூன்றாண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்ற நீதிபதி ஜி.எஸ். சிங்வி. சாப்பாட்டு நேரத்தின்போது தாங்கள் வேலையைப் பற்றி பேசுவதே இல்லை என்று இவர் சொல்கிறார். சட்ட அறிவைத் தாண்டி, இந்த விருந்தின் மூலம் தாங்கள் கொஞ்சம் உணவு அறிவையும் வளர்த்துக்கொள்வதாக சிங்வி கூறுகிறார்.

    “வீட்டில் தயாரித்த கேரள உணவு வகைகளான சிவப்பு அரிசி சாதம், ரசம், பாயசம் எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு ‘சர்க்கரை’ பிரச்சினை இருப்பதால் நான் இனிப்புகளைத் தொடுவதே இல்லை. ஆனால் கேரள சகோதர நீதிபதி அன்போடு பரிமாறும் அதிசுவையான பாயசத்தை மட்டும் என்னால் மறுக்க முடிந்ததே இல்லை” என்று பழைய நினைவுகளில் சிலிர்க்கிறார், சிங்வி.

    நெய் மணக்க மணக்க ‘தால் பாட்டி’ போன்ற உணவுகளைப் பரிமாறுவது முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதாவின் வழக்கம்.

    “எங்கள் வீட்டில் செய்யும் தால் பாட்டி, நெய்யில் ஊறியது என்பதால், அதைச் சாப்பிட்டதும் சக நீதிபதிகளுக்கு கண்கள் செருக ஆரம்பித்துவிடும்” என்று சிரிக்கிறார்.

    தொடர்ந்து அவரே, “சுப்ரீம் கோர்ட்டு, ஒரு குட்டி இந்தியா. இங்குள்ள நீதிபதிகள், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். எனவே இந்த விருந்து, பல்வேறு பிராந்திய உணவுகளின் கொண்டாட்டமாக அமைகிறது” என்கிறார்.
    Next Story
    ×