search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை நட்சத்திர ஓட்டலுக்கு காடல் ஜீன்சன்ராஜாவை போலீசார் அழைத்துவந்த காட்சி.
    X
    சென்னை நட்சத்திர ஓட்டலுக்கு காடல் ஜீன்சன்ராஜாவை போலீசார் அழைத்துவந்த காட்சி.

    கேரளாவில் 4 பேர் கொலை: கொலையாளியின் ரத்தக்கறை படிந்த சட்டை சென்னை ஓட்டலில் மீட்பு

    கேரளாவில் 4 பேரை கொலை செய்தபோது காடல் ஜீன்சன்ராஜா அணிந்திருந்த ரத்தகறை படிந்த ஆடைகளை சென்னை ஓட்டலிருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் நந்தன்கோடு பகுதியில் தொழில் அதிபர், அவரது மனைவி, மகள், உறவுப்பெண் ஆகிய 4 பேர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். அவர்களது பிணங்களும் எரிக்கப்பட்டு கிடந்தது.

    கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை பற்றி போலீசார் விசாரணை நடத்தி தொழில் அதிபரின் மகன் காடல் ஜீன்சன்ராஜாவை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் இணைய தளம்மூலம் சாத்தான் வழிபாடு, பில்லிசூனியம் பற்றி தெரிந்துகொண்டதாகவும் சாத்தான் வழிபாட்டிற்காக 4 பேரையும் கொலை செய்ததாகவும் தெரிவித்தார். மேலும் முன்னுக்குப்பின் முரணாக சில தகவல்களையும் வெளியிட்டார்.

    இதைதொடர்ந்து அவரது மனநிலையை கண்டறிய போலீசார் பரிசோதனை நடத்தினார்கள். மேலும் அவரை போலீஸ் காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வருகிற 20-ந் தேதியுடன் போலீஸ் காவல் முடிவடைவதால் காடல் ஜீன்சன்ராஜாவை போலீசார் தற்போது கொலை நடந்த இடம், அவர் பதுங்கி இருந்த சென்னை நட்சத்திர ஓட்டல் போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகிறார்கள்.

    கொலை செய்த பிறகு காடல் ஜீன்சன்ராஜா சென்னைக்கு தப்பிச் சென்று ஒரு நட்சத்திர ஓட்டலில் பதுங்கி இருந்தார். பிறகு அவர் திருவனந்தபுரம் திரும்பியபோதுதான் போலீஸ் பிடியில் சிக்கிக் கொண்டார். இதை தொடர்ந்து சென்னையில் அவர் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலுக்கு போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது ஓட்டல் ஊழியர்கள் அவரை அடையாளம் காட்டினார்கள். மேலும் அந்த ஓட்டலின் கண்காணிப்பு கேமராவிலும் காடல் ஜீன்சன்ராஜா அங்கு வந்த காட்சிகள் பதிவாகி இருந்தது.

    காடல் ஜீன்சன்ராஜா தங்கி இருந்து அறையில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு கொலை செய்தபோது காடல் ஜீன்சன்ராஜா அணிந்திருந்த ரத்தகறை படிந்த ஆடைகள் மறைவான இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஒரு பையையும் போலீசார் அங்கிருந்து கைப்பற்றி உள்ளனர்.

    அதன்பிறகு பலத்த பாதுகாப்புடன் மீண்டும் காடல் ஜீன்சன்ராஜாவை கேரள போலீசார் திருவனந்தபுரம் அழைத்துச் சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.


    Next Story
    ×