search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய பிரதமர் மோடி: அதிருப்தியாளர்களுடன் சமரச முயற்சி
    X

    குஜராத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய பிரதமர் மோடி: அதிருப்தியாளர்களுடன் சமரச முயற்சி

    குஜராத்தில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் பிரதமர் மோடி அம்மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். முதல்கட்டமாக அதிருப்தியாளர்களுடன் சமரசம் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
    சூரத்:

    குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலம் ஆகும்.

    நரேந்திர மோடி தொடர்ந்து அங்கு 3 தடவை முதல்-மந்திரியாக இருந்த நிலையில் பின்னர் பிரதமர் ஆனார். அவர் குஜராத் முதல்-மந்திரியாக இருந்த வரை அந்த மாநிலத்தில் பாரதிய ஜனதா அசைக்க முடியாத சக்தியாக இருந்து வந்தது.

    மோடி பிரதமர் ஆனதும் ஆனந்திபென் பட்டேல் முதல்-மந்திரியானார். ஆனால் அவரது ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து முதல்-மந்திரி மாற்றப்பட்டார். ஆனாலும் கூட மோடி இருந்த காலத்தை போல பாரதிய ஜனதாவுக்கு செல்வாக்கு இல்லாமல் சற்று சரிவு இருப்பதாகவே கூறப்படுகிறது.

    2015-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்று இருந்தாலும், அதை நெருங்கி காங்கிரசும் அதிக இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. காங்கிரஸ் இந்த அளவுக்கு வெற்றி பெறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

    இதற்கு குஜராத்தில் பதிதார் சமூகத்தினர் மற்றும் பழங்குடி சமூகத்தினர் அரசுக்கு எதிராக இருந்தது தான் காரணம் என்று கூறப்பட்டது. கடந்த காலத்தில் இவர்கள் எல்லாம் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக இருந்தனர். அவர்கள் தங்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு வற்புறுத்தினார்கள்.

    அதற்கு அரசு உரிய முடிவுகளை எடுக்காததால் பாரதிய ஜனதாவுக்கு எதிராக இந்த சமூகத்தினர் திரும்பினார்கள். இதனால் தான் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கு அதிக இடங்கள் கிடைத்ததாக கருதப்பட்டது. இதன் பாதிப்பு சட்டசபை தேர்தலிலும் எதிரொலித்துவிடக் கூடாது என மோடி விரும்புகிறார்.

    மோடி செல்வாக்கால் இன்று நாட்டின் பல மாநிலங்களில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனாலும் சொந்த மாநிலமான குஜராத்தில் பின்னடைவு ஏற்பட்டால் அது மோடிக்கு ஏற்பட்ட பின்னடைவாக மாறிவிடும். எனவே கடந்த காலங்களை போலவே குஜராத்திலும் அமோக வெற்றி பெற வேண்டும் என்று மோடி விரும்புகிறார்.



    இதற்காக தேர்தல் பிரசாரத்தை இப்போதே மோடி தொடங்கிவிட்டார். நேற்று குஜராத் மாநிலம் சூரத்தில் 6-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் தேர்தலை மையமாக கொண்டு நடந்தவை ஆகும்.

    சூரத்தில் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நரேந்திர மோடி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். இது தேர்தல் பிரசாரம் நிகழ்வாகவே கருதப்படுகிறது. அரசு மீது அதிருப்தியில் உள்ள பதிதார் சமூகத்தினரை சமரசப்படுத்தும் வகையில் அந்த சமூகத்தின் அறக்கட்டளை மூலம் ஆரம்பித்துள்ள ஆஸ்பத்திரி ஒன்றையும் மோடி திறந்து வைத்தார்.

    அருகில் உள்ள யூனியன் பிரதேசத்தில் தத்ரா நகர் ஹாவேலியில் பழங்குடி மக்களின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது கடந்த கால மத்திய அரசு பழங்குடி மக்களை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டதாகவும், பாரதிய ஜனதா அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து இருப்பதாகவும் கூறினார். அவருடைய பேச்சு பழங்குடி மக்களை கவரும் வகையில் இருந்தது.

    குஜராத்தில் உள்ள பழங்குடி மக்களை மீண்டும் பாரதிய ஜனதா பக்கம் இழுக்கும் வகையில் தனது பேச்சை அமைத்துக் கொண்டார். சூரத்தில் நடந்த நேற்றைய நிகழ்வுகள் அனைத்துமே தேர்தலை மையமாக கொண்டே நடத்தப்பட்டதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

    இது சம்மந்தமாக பாரதிய ஜனதா தலைவர் ஒருவர் கூறும்போது, குஜராத் தேர்தலில் பதிதார் சமூகத்தினருடைய ஆதரவு இருந்தால் தான் பாரதிய ஜனதாவுக்கு வெற்றி கிடைக்கும். உள்ளாட்சி தேர்தலில் அவர்கள் வேறு முடிவு எடுத்ததால் நாங்கள் பாதிக்கப்பட்டோம். பிரதமர் மோடி வருகையால் இவை எல்லாம் சரியாகிவிடும் என்று கருதுகிறோம் என்று கூறினார்.
    Next Story
    ×