search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் குஞ்சாலிகுட்டியை தூக்கி வைத்து வெற்றி முழக்கமிடும் தொண்டர்கள்
    X
    காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் குஞ்சாலிகுட்டியை தூக்கி வைத்து வெற்றி முழக்கமிடும் தொண்டர்கள்

    மலப்புரம் எம்.பி. தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் வெற்றிமுகம்

    மலப்புரம் எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணி தொடங்கியது. பகல் 10 மணி நிலவரப்படி காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் குஞ்சாலிகுட்டி சுமார் 70 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி முகத்தில் இருக்கிறார்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மலப்புரம் தொகுதியின் எம்.பி.யாக இருந்தவர் அகமது.

    காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரான அகமது கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்ற போது மயங்கி விழுந்தார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதையடுத்து அவர் வெற்றி பெற்ற மலப்புரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. கடந்த 12-ந்தேதி அங்கு ஓட்டு பதிவு நடந்தது.

    இத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் குஞ்சாலிகுட்டி வேட்பாளராக போட்டியிட்டார். இவரை எதிர்த்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி சார்பில் பைசலும், பா.ஜனதா கூட்டணி சார்பில் ஸ்ரீபிரகாசும் போட்டியிட்டனர்.

    மும்முனை போட்டி நிலவிய இத்தொகுதியில் மீண்டும் வெற்றியை ருசிக்க காங்கிரஸ் கூட்டணி கடுமையான பிரசாரத்தில் ஈடுபட்டது.

    இடைத்தேர்தலில் இத்தொகுதியில் 71.33 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. இந்த ஓட்டுகள் எண்ணும் பணி மலப்புரம் அரசு கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

    8.30 மணிக்கு முதல் கட்ட ஓட்டு எண்ணிக்கை நிலவரம் வெளியானது. இதில் தொடக்கம் முதலே காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் குஞ்சாலிகுட்டி முன்னிலை பெற்றார். 2-வது இடத்துக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வேட்பாளர் பைசலும், 3-வது இடத்துக்கு பா.ஜனதா வேட்பாளர் ஸ்ரீபிரகாசும் தள்ளப்பட்டனர்.

    முதல் சுற்று முடிவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி வேட்பாளர் பைசலை விட காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் குஞ்சாலிகுட்டி 3 ஆயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்றிருந்தார்.

    அடுத்தடுத்த சுற்றுகளின் முடிவில் இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் அதிகரித்துக் கொண்டே சென்றது.

    பகல் 10 மணி அளவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி வேட்பாளர் பைசலை விட காங்கிரஸ் கூட்டணியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் குஞ்சாலிகுட்டி சுமார் 70 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி முகத்தில் இருந்தார்.

    பா.ஜனதா கட்சி 22 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்று 3-வது இடத்தில் இருந்தது.

    தேர்தல் முடிவுகள் வெற்றி முகமாக இருப்பது பற்றி குஞ்சாலிகுட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

    மலப்புரம் தொகுதியில் எங்கள் கட்சியின் தலைவர் இ.அகமது கடந்த தேர்தலில் ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 739 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருந்தார். அவர் மொத்தம் 4 லட்சத்து 37 ஆயிரத்து 723 வாக்குகள் பெற்றிருந்தார்.


    வெற்றி உற்சாகத்தில் முஸ்லிம் லீக் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள்

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளர் கடந்த தேர்தலில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 984 வாக்குகளே பெற்றிருந்தார். பா.ஜனதா கட்சிக்கு 64 ஆயிரத்து 705 வாக்குகளே கிடைத்திருந்தது.

    இந்த தேர்தலில் நாங்கள் இதைவிடவும் கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். அந்த வித்தியாசம் எவ்வளவு என்பதை அறிவதற்காகவே காத்திருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பகல் 10 மணி நிலவரப்படி மலப்புரம் தொகுதியின் ஓட்டு எண்ணிக்கை விபரம்:

    மொத்த ஓட்டுகள் - 13,12,693

    பதிவான ஓட்டுகள் - 9,36,315

    காங். கூட்டணி - 1,95,048

    மார்க்சிஸ்டு கூட்டணி - 1,25,874

    பா.ஜனதா கூட்டணி-24,581
    Next Story
    ×