search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவப்பு சுழல் விளக்கு காரில் பொருத்திய விவகாரம்: பஞ்சாயத்து தலைவிக்கு அதிகாரி நோட்டீசு
    X

    சிவப்பு சுழல் விளக்கு காரில் பொருத்திய விவகாரம்: பஞ்சாயத்து தலைவிக்கு அதிகாரி நோட்டீசு

    கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்ட பஞ்சாயத்து தலைவி காரில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்தப்பட்டது. இதற்கு விளக்கம் அளிக்கும்படி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்ட பஞ்சாயத்து தலைவியாக இருப்பவர் சைத்ராஸ்ரீ. இவருக்கு அரசுக்கு சொந்தமான கார் வழங்கப்பட்டுள்ளது. அந்த காரில் சைத்ராஸ்ரீ சிவப்பு சுழல் விளக்கு பொருத்தியதாக தெரிகிறது.

    பொதுவாக, ஒரு மாநிலத்தில் முதல்-மந்திரி, கவர்னர், மந்திரி, கலெக்டர் ஆகியோரின் கார்களில் தான் சிவப்பு சுழல் விளக்கு பொருத்த வேண்டும். ஆனால் சிக்கமகளூரு மாவட்ட பஞ்சாயத்து தலைவி சைத்ராஸ்ரீ விதிமுறைகளை மீறி தனது காரில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்தியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து மாவட்ட முதன்மை செயல் அதிகாரி ராகப்பிரியாவுக்கு புகார்கள் வந்தன.

    இந்த நிலையில் விதி முறைகளை மீறி எதற்காக காரில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்தினீர்கள் என்றும், இதற்கு உடனடியாக விளக்கம் அளித்து கடிதம் அனுப்ப வேண்டும் என்றும் கூறி மாவட்ட முதன்மை செயல் அதிகாரி ராகப்பிரியா, மாவட்ட பஞ்சாயத்து தலைவி சைத்ராஸ்ரீக்கு நோட்டீசு அனுப்பி உள்ளார்.

    இதுகுறித்து மாவட்ட பஞ்சாயத்து தலைவி சைத்ராஸ்ரீயிடம் நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறுகையில், ஒரு மந்திரிக்கு உள்ள பொறுப்பு தான் எனக்கும் உள்ளது. எனது அதிகாரம் இந்த மாவட்டம் முழுவதும் உள்ளது. ஆதலால் நான் காரில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்தினேன். இதற்கு உரிய பதில் அளிக்கப்படும் என்றார்.

    மாவட்ட பஞ்சாயத்து தலைவி சைத்ராஸ்ரீ பா.ஜனதாவை சேர்ந்தவர் ஆவார். இவர் நேற்று முன்தினம் மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் தோணியில் பேசினார். இதனால், அவருக்கு நேற்று இந்த நோட்டீசு அனுப்பப்பட்டதாக சிக்கமகளூருவில் பரபரப்பாக பேசப்பட்டது.

    Next Story
    ×