search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதல பாதாளத்திற்குச் சென்றது: ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில் வெறும் 6.5 சதவீத வாக்குப்பதிவு
    X

    அதல பாதாளத்திற்குச் சென்றது: ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில் வெறும் 6.5 சதவீத வாக்குப்பதிவு

    ஜம்மு காஷ்மீரில் இன்று இடைத் தேர்தல் நடந்த ஸ்ரீநகர் பாராளுமன்றத் தொகுதியில் வன்முறை நீடித்ததால் பொதுமக்கள் வாக்களிக்க வெளியே வரவில்லை. இதனால், வெறும் 6.5 சதவீத வாக்குகளே பதிவாகி உள்ளது.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா போட்டியிட்டார். இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து பல்வேறு பகுதிகளில் போராட்டக்காரர்கள் தேர்தலில் வாக்களிக்க வருவோரை தடுத்ததால் பிரச்சனை ஏற்பட்டது.

    போராட்டக்காரர்களை பாதுகாப்பு படையினர் கலைக்க முயன்றபோது, கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் மோதல், வன்முறை, குண்டுவீச்சு என வன்முறை நீடித்தது. குறிப்பாக நகர்ப்பகுதியில் தேர்தலை நடத்த விடாமல் வன்முறையாளர்கள் கல்வீச்சு தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். வன்முறையாளர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். அப்போதும் வன்முறையாளர்கள் கட்டுப்படவில்லை. துப்பாக்கி சூடு மற்றும் வன்முறைக்கு 6 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.

    இவ்வாறு தொகுதியின் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் பதட்டம் நீடித்ததால் பொதுமக்களால் வாக்களிக்க வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வாக்குப்பதிவு அதல பாதாளத்திற்குச் சென்றது. முதல் 2 மணி நேரத்தில் 1 சதவீதம் வாக்குகளே பதிவாகி இருந்தது. 2 மணி நிலவரப்படி சற்று அதிகரித்து 5.52 சதவீத வாக்குகள் பதிவானது. ஒரு சில வாக்குச்சாவடிகளில் மதியம் வரை ஒரு வாக்குகூட பதிவாகாத நிலை இருந்தது.

    இந்நிலையில், 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், 6.5 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

    எத்தனை வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும்? என்று கேட்டபோது, 100க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படலாம் என்றார்.

    ‘12-ம் தேதி அனந்த்நாக் மக்களவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கும் தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையத்திற்கு சவாலாக இருக்கும்’ என்றும் தேர்தல் அதிகாரி கூறினார்.

    அனந்த்நாக் தொகுதியில் முதலமைச்சர் மெகபூபா முப்தியின் இளைய சகோதரர் தசாதக் முப்தி முதல் முறையாக போட்டியிடுகிறார்.
    Next Story
    ×