search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாய கடனை ரத்து செய்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம்: அய்யாக்கண்ணு அறிவிப்பு
    X

    விவசாய கடனை ரத்து செய்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம்: அய்யாக்கண்ணு அறிவிப்பு

    விவசாய கடனை ரத்து செய்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று விவசாயிகள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு கூறினார்.
    புதுடெல்லி:

    டெல்லி ஜந்தர் மந்தரில், தமிழக விவசாயிகள், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்ட முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில் 15-வது நாளான நேற்று அனைத்து விவசாயிகளும் மகாத்மா காந்தி படத்தை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நேற்று போராட்டக்குழுவினரை புதுச்சேரி மாநில முதல் மந்திரி வி.நாராயணசாமி, காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மணிசங்கர் அய்யர், ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரான சோம்நாத் பாரதி, கேரளாவின் விவசாயத்துறை மந்திரி சுனில் குமார் ஆகியோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு, அ.தி.மு.க. எம்.பி. ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் மத்திய வேளாண்மைத்துறை மந்திரி ராதா மோகன் சிங்கை சந்தித்தனர். உடன், விவசாயிகள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட சில விவசாயிகளை அழைத்துச் சென்றனர்.



    போராடும் விவசாயிகள் தரப்பில் மீண்டும் ஒரு கோரிக்கை மனு ராதாமோகன்சிங்கிடம் அளிக்கப்பட்டது. இதே குழு மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து தமிழகத்துக்கு வறட்சி நிவாரணத்தொகையை அதிகரிக்குமாறு கோரிக்கை மனு அளித்து வந்தது.

    பிறகு, தம்பிதுரை பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து விவசாயிகள் சார்பாக கோரிக்கை மனுவை அளித்தார்.

    அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணியின் தரப்பில் மைத்ரேயன் எம்.பி., விவசாயிகளை ஜந்தர் மந்தர் பகுதியில் சந்தித்து, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தங்கள் அணியின் ஆதரவை தெரிவிக்க அனுப்பி வைத்ததாக தெரிவித்தார்.

    தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு மற்றும் ஒரு சிலரை அழைத்துக் கொண்டு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியை டெல்லியில் அவருடைய அலுவலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து அய்யாக்கண்ணு கூறியதாவது:-

    விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் நிதி மந்திரியிடம் முன்வைத்தோம். இதற்கு ஆவன செய்ய முயற்சிப்பதாக அவர் கூறினார்.

    எங்களது இந்த சந்திப்பு கடந்த கால சந்திப்பை விட நன்றாக இருந்தது. ஆனால் மனநிறைவு அளிக்காத சந்திப்பாக அமைந்து விட்டது. அதனால் எங்கள் போராட்டம் தொடரும். எங்கள் கடன்களை தள்ளுபடி செய்வதாக பிரதமர் அறிவித்தால்தான் நாங்கள் டெல்லியை விட்டு செல்வோம்.

    இவ்வாறு அய்யாக்கண்ணு கூறினார்.

    நேற்று மாலை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விவசாயிகளை ஜந்தர் மந்தர் பகுதிக்கு சென்று சந்தித்தார். பின்னர், அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகளை அழைத்துக்கொண்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்தார். விவசாயிகள் தரப்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது. இந்த சந்திப்பு முடிந்ததும் ஜி.கே.வாசன் கூறியதாவது:-

    கடந்த 15 நாட்களாக போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்தும், தமிழகத்தில் விவசாயிகள் படும் துயரங்கள் குறித்தும் மிகவும் விரிவாக ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தோம். அவர் மிகவும் கனிவுடன் அனைத்தையும் கேட்டுக்கொண்டார். உடனடியாக இந்த கோரிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து ஆவன செய்ய முயற்சிப்பதாக கூறினார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு கூறியதாவது:-

    ஜனாதிபதி எங்கள் கோரிக்கைகளை மிகவும் கனிவுடன் கேட்டுக்கொண்டார். 15 நாட்களாக போராட்டம் செய்து வருகிறீர்களா என்று கேட்டார். தமிழக விவசாயிகளின் பிரச்சினைகளை நெடுநேரம் எங்களிடம் விரிவாக கேட்டுக்கொண்டார்.



    மிகவும் அக்கறையுடன் விசாரித்தார். உடனடியாக மத்திய அரசுக்கு எங்கள் மனுவை அனுப்புவதாகவும் கூறினார். இந்த சந்திப்பு மனநிறைவை அளித்தாலும் எங்கள் மனுவின் மீது பிரதமர் உடனடியாக தலையிட்டு தமிழக விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தால் மட்டுமே நாங்கள் போராட்டத்தை கைவிட்டு ஊர் திரும்புவோம். இல்லையென்றால் எங்கள் போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×