search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்ற அனுமதிக்காதது ஏன்? பதில் அளிக்க ரிசர்வ் வங்கி மறுப்பு
    X

    பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்ற அனுமதிக்காதது ஏன்? பதில் அளிக்க ரிசர்வ் வங்கி மறுப்பு

    பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தபடி, பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றுவதற்கு மார்ச் 31-ந் தேதி வரை அனுமதிக்காதது ஏன் என்ற கேள்விக்கு ரிசர்வ் வங்கி பதில் அளிக்க மறுத்து விட்டது.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தபடி, பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றுவதற்கு மார்ச் 31-ந் தேதி வரை அனுமதிக்காதது ஏன் என்ற கேள்விக்கு ரிசர்வ் வங்கி பதில் அளிக்க மறுத்து விட்டது.

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் 8-ந் தேதி நாட்டு மக்களுக்கு டி.வி.யில் உரை ஆற்றினார். அப்போது அவர் ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். அந்த நோட்டுகளை மார்ச் 31-ந் தேதி வரை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்வதற்கு அனுமதிக்கப்படும் என அப்போது அவர் வாக்குறுதி அளித்தார்.

    ஆனால் மார்ச் 31-ந் தேதி என்ற கால அவகாசம் பொதுமக்களுக்கு அல்ல. அது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு என கூறப்பட்டது. பிரதமர் வாக்குறுதி அளித்தபடி, மார்ச் 31-ந் தேதி வரை நாட்டு மக்கள் அனைவருக்கும் ‘செல்லாது’ என அறிவிக்கப்பட்ட பழைய ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை மாற்றுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

    இது தொடர்பாக ரிசர்வ் வங்கியிடம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் அடிப்படையில் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அந்த கேள்விக்கு பதில் அளிக்க ரிசர்வ் வங்கி மறுத்து விட்டது.

    ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை மாற்றுவதற்கான அவகாசம் மார்ச் 31-ந் தேதி என்பது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்குத்தான் என்பது குறித்த கோப்பு குறிப்புகளை பகிர்ந்து கொள்ள முடியாது, அது நாட்டு நலனுக்கு எதிரானது என்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

    எனவே இதுபற்றி மத்திய தகவல் அதிகாரி சுமன்ராய் அளித்துள்ள பதிலில், “மனுதாரர் எழுப்பியுள்ள கேள்வி, தகவல் அறியும் உரிமைச்சட்டம் பிரிவு 2 (எப்)படி, தகவல் என்ற வரையறையின்கீழ் வராது” என கூறப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் முன்னாள் தகவல் ஆணையர் சைலேஷ் காந்தி, “தகவல் அறியும் உரிமைச்சட்டம் பிரிவு 8 (2), தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் விலக்கு பெற்றுள்ள தகவலைக்கூட, பெரும்பாலான மக்களின் நலனையொட்டி தெரிவிக்கலாம்” என்று கூறி இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு ஒரு வழக்கை விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×