search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்போன் சந்தாதாரர் அனைவரிடமும் ஆதார் எண்ணை கட்டாயம் பெற தொலைதொடர்புத்துறை உத்தரவு
    X

    செல்போன் சந்தாதாரர் அனைவரிடமும் ஆதார் எண்ணை கட்டாயம் பெற தொலைதொடர்புத்துறை உத்தரவு

    நடப்பு செல்போன் சந்தாதாரர் அனைவரிடமும் ஆதார் எண்ணை கட்டாயம் கேட்டுப்பெற வேண்டும் என்று செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு தொலைதொடர்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    நடப்பு செல்போன் சந்தாதாரர் அனைவரிடமும் ஆதார் எண்ணை கட்டாயம் கேட்டுப்பெற வேண்டும் என்று செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு தொலைதொடர்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

    அத்தியாவசிய சேவைகள், அரசின் நலத்திட்ட உதவிகள், சலுகைகள் அனைத்துக்கும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் போலிகள் அடையாளம் காணப்பட்டு, ஒழிக்கப்படுகின்றன. ஊழலும் தடுக்கப்படுகிறது.

    இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள நடப்பு செல்போன் சந்தாதாரர்களிடம் அவர்களது ஆதார் எண்களை கேட்டுப்பெற வேண்டும், அதன் அடிப்படையில் அவர்களை சரிபார்க்க வேண்டும் என்று தொலைதொடர்புத்துறை, செல்போன் சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரி மாதம் பிறப்பித்த ஒரு உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தொலைதொடர்புத்துறை கூறுகிறது.

    சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், “பயனுள்ள ஒரு செயல்முறையின் மூலம், அனைத்து செல்போன் சந்தாதாரர்களின் அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும். ஒரு வருட காலத்திற்குள் இதை செல்போன் சேவை நிறுவனங்கள் செய்து முடிக்க வேண்டும். இதே போன்று புதிதாக செல்போன் சேவை இணைப்பு பெறுகிறவர்களின் முகவரிகளை சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

    இதை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தொலைதொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அனைத்து லைசென்சுதாரர்களும் (செல்போன் சேவை நிறுவனங்கள்), நடப்பில் உள்ள அனைத்து சந்தாதாரர்களை (அவர்கள் பிரிபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு என எத்தகைய சந்தாதாரராக இருந்தாலும்) கே.ஒய்.சி. என்னும் பெயர், வயது, முகவரி, ஆதார் எண் உள்ளிட்ட தகவல்களை கட்டாயம் பெற்று, மீண்டும் சரிபார்க்க வேண்டும்.

    அனைத்து சந்தாதாரர் களுக்கும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் கே.ஒய்.சி. தகவல்களை சரிபார்க்க இருப்பது பற்றி செல்போன் சேவை நிறுவனங்கள், பத்திரிகை விளம்பரங்கள், டி.வி., ரேடியோ விளம்பரங்கள், எஸ்.எம்.எஸ். என்னும் குறுந்தகவல் சேவை வழியாக தெரிவிக்க வேண்டும். இது தொடர்பாக தங்களது இணையதளத்திலும் செல்போன் சேவை நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும்.

    அதே நேரத்தில் செல்போன் சேவை நிறுவனங்கள் பொதுமக்களுக்கு அசவுகரியங்கள் ஏற்படாதவாறும், நீண்ட வரிசைகள் உருவாகாதவாறும், ஒரு பொதுவான நடைமுறையை ஏற்படுத்தி பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    செல்போன் சந்தாதாரர்களிடம் பெயர், முகவரி, ஆதார் எண் பெற்று, சரிபார்ப்பதற்கான வழிமுறைகள் பற்றி விவாதிப்பதற்காக இந்த வாரம் தனது உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டப்போவதாக செல்போன் சேவை வழங்கும் நிறுவனங் களின் கூட்டமைப்பு (சி.ஓ.ஏ.ஐ.) கூறி உள்ளது.

    நாடு முழுவதும் 100 கோடிக்கும் மேற்பட்ட செல்போன் சந்தாதாரர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த 100 கோடி பேரின் ஆதார் எண் உள்ளிட்ட கே.ஒய்.சி. தகவல்களை செல்போன் சேவை நிறுவனங்கள் ஓராண்டுக்குள் பெற்று, சரிபார்த்து விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×