search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி.யில் இறைச்சி, மீன் கடை அசைவ ஓட்டல்கள் ஸ்டிரைக்
    X

    உ.பி.யில் இறைச்சி, மீன் கடை அசைவ ஓட்டல்கள் ஸ்டிரைக்

    உத்தர பிரதே முதல்வர் யோகி ஆதித்யாத்நாத் ஆடு, கோழி வெட்டும் இறைச்சி கூடங்களை மூட உத்தரவிட்டுள்ளதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் இறைச்சி கடைக்காரர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
    லக்னோ:

    உத்தரபிரதேச புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ள யோகி ஆதித்யநாத் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவர் மாடுகளை வெட்டும் இடங்களை மூடுவதற்கு ஏற்கனவே உத்தரவிட்டார்.

    மேலும் அரசின் அனுமதி பெறாத ஆடு- கோழி வெட்டும் இறைச்சி கூடங்களையும் அவர் மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளார்.

    இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. உத்தர பிரதேசத்தில் பல இடங்களில் அனுமதி பெறாமலேயே இறைச்சி கூடங்கள் செயல்பட்டு வந்தன. அவற்றை எல்லாம் மூட வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.



    முதல்-மந்திரியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் இறைச்சி கடைக்காரர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். நேற்று முன்தினம் மாலை சில பகுதிகளில் இறைச்சி கடைகள் மூடப்பட்டன. நேற்று முழுமையாக மூடப்பட்டன.

    இந்த போராட்டம் கால வரையின்றி தொடரும் என்று போராட்ட அமைப்பினர் அறிவித்துள்ளனர். மாநிலம் முழுவதும் கோழி, இறைச்சி, மீன், முட்டை கடைகள் மூடப்பட்டன. இது மட்டும் அல்ல, அசைவ ஓட்டல்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.

    இதனால் உத்தர பிரதேசத்தில் இறைச்சி உணவுகள் கிடைக்கவில்லை. இது, அசைவ பிரியர்களை கடும் அவதிக்குள்ளாக்கி இருக்கிறது.

    உத்தரபிரதேசத்தில் எருமை மாட்டின் இறைச்சிகளை ஏழை மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். ஆட்டு இறைச்சியின் விலை அங்கு ரூ. 450 ஆக உள்ளது. ஆனால், எருமை மாட்டின் இறைச்சி ரூ. 180-க்கு கிடைக்கிறது. எனவே அவர்கள் இதைத்தான் வாங்கி சாப்பிட்டனர்.

    இப்போது எருமை மாடுகளை வெட்டும் கூடங்களும் மூடப்பட்டு விட்டது. மேலும் உத்தர பிரதேசத்தில் உள்ள மிருக காட்சி சாலைகளில் உள்ள சிங்கம், புலி போன்ற விலங்குகளுக்கு எருமை மாட்டு இறைச்சியை விலைக்கு வாங்கி இரையாக போடுவது வழக்கம்.

    ஆனால், இப்போது எருமை மாட்டின் இறைச்சி கிடைக்காததால் அவற்றுக்கு உணவு போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே முதல்- மந்திரி ஆதித்யநாத், அனுமதிக்கப்பட்ட இறைச்சி கூடங்கள் செயல்படுவதில் எந்த தடையும் இல்லை. எனவே, அவர்கள் தொடர்ந்து செயல்படலாம் என்று கூறி இருக்கிறார்.
    Next Story
    ×