search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரைவிங் லைசென்சுக்கு ஆதார் கார்டு அவசியம்: அக்டோபர் மாதம் அமலுக்கு வருகிறது
    X

    டிரைவிங் லைசென்சுக்கு ஆதார் கார்டு அவசியம்: அக்டோபர் மாதம் அமலுக்கு வருகிறது

    டிரைவிங் லைசென்சுக்கு ஆதார் கார்டுஅவசியம் இத்திட்டம் அக்டோபர் மாதம் அமலுக்கு வருகிறது. புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஆதார் எண் அவசியமாக்கப்படுகிறது.

    புதுடெல்லி,:

    மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெறுவதற்கு மட்டு மின்றி அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாகிறது.

    வங்கி, ரே‌ஷன்கடை, பாஸ்போர்ட், தபால்துறை உள்ளிட்ட பல துறைகளில் ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது.

    பள்ளிகளில் கூட மாணவர்களுக்கு ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுத்து பதிவேடுகளில் இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த நிலையில் நாடு முழுவதும் புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஆதார் எண் அவசியமாக்கப்படுகிறது.

    இருசக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்கள் பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்படுகிறது. ரே‌ஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற இருப்பிட சான்று இருந்தாலும் ஆதார் எண்களை இணைக்க தமிழக போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.

    வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்கள், மட்டுமின்றி போலி பதிவு எண் வாகனங்களை கண்டுபிடிக்க இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையில் புதிதாக டிரைவிங் லைசென்சு பெறுவதற்கும் ஆதார் எண் அவசிய மாக்கப்படுகிறது. இரு சக்கர மற்றும் 4 சக்கர, கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான லைசென்சு பெறும் முறையில் மாற்றம் கொண்டு வர மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

    புதிய டிரைவிங் லைசென்சு மட்டுமின்றி ஏற்கனவே உள்ள லைசென்சுகளின் காலம் முடிந்து புதுப்பிப்பதற்கும் ஆதார் அட்டையை பயன் படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.

    ஆதார் அட்டை அவசிய மயமாக்கப்படுவதன் மூலம் போலி லைசென்சு பயன் படுத்துவதை தடுப்பது மட்டுமின்றி போக்குவரத்து குற்றங்களையும் தடுக்க முடியும். போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க இத்திட்டம் உதவும் என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் நம்புகிறது.

    நாடு முழுவதும் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் ஆதார் எண் இணைக்கப்பட்டால் போக்குவரத்து குற்றங்களில் ஈடுபடும் எந்த மாநில வாகனமாக இருந்தாலும் இதனை எளிதில் கண்டு பிடிக்க முடியும்.


    ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறுவிதமான லைசென்சு முறைகள் பின்பற்றப்படுகின்றன. அது பல்வேறு சிரமங்களை ஏற்படுத்துவதால் ஆதார் எண் அவசியமாக்கப்படுகிறது.

    இதன் மூலம் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே கூரையின் கீழ் டிரைவிங் லைசென்ஸ் வழங்க முடியும். இந்த ஒரு ஆவணத்தின் மூலம் சாலை போக்குவரத்து துறையில் உள்ள குறைகளை சரி செய்ய முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது.

    ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட டிரைவிங் லைசென்சு பெற்று மோசடியில் ஈடுபடுவதை தடுக்கவும், இத்திட்டம் பயன் உள்ளதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நாடு முழுவதும் 18 கோடி டிரைவிங் லைசென்சு இதுவரையில் வினியோகிக்கப்பட்டுள்ளன. இவற்றை முறைப்படுத்த ஆதார் அட்டை ஒன்று மட்டும் போதும் என்று அரசு கருதுகிறது.

    இத்திட்டம் அக்டோபர் மாதம் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.

    Next Story
    ×