search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரபிக்கடலில் சத்ரபதி சிவாஜிக்கு 210 மீட்டர் உயர சிலை
    X

    அரபிக்கடலில் சத்ரபதி சிவாஜிக்கு 210 மீட்டர் உயர சிலை

    உலகிலேயே உயரமானது என்ற பெருமையை பெற அரபிக்கடலில் சத்ரபதி சிவாஜிக்கு 210 மீட்டர் உயரத்தில் சிலை வைக்கப்பட உள்ளது.
    மும்பை:

    மும்பை மெரின் டிரைவ் கடற்கரையில் இருந்து சுமார் 1½ கி.மீ. உள்ளே அரபிக்கடலில் சத்ரபதி சிவாஜிக்கு பிரமாண்டமான நினைவிடம் அமைக்கப்படுகிறது. இந்த நினைவிடம் சுமார் ரூ. 3 ஆயிரத்து 600 கோடி செலவில் உருவாக்கப்படுகிறது. முதல்கட்ட பணிகளுக்கு மட்டும் ரூ. 2 ஆயிரத்து 500 கோடி செலவாகும் என கூறப்படுகிறது.

    நினைவிடத்தில் கோவில், அருங்காட்சியகம், ஆஸ்பத்திரி ஆகியவை அமைக்கப்பட உள்ளன. இதன் நுழைவு வாயில் ராய்காட் கோட்டை போல கட்டப்பட உள்ளது.

    இதுதவிர நினைவிடத்தில் திரையரங்கம், ஹெலிப்பேடு ஆகியவை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் நினைவிடத்தில் சத்ரபதி குதிரையில் வீற்றிருப்பது போல 192 மீட்டர் உயரத்திற்கு பிரமாண்ட சிலை அமைக்கப்பட இருந்தது. இந்த சிலை அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலை, துபாயில் உள்ள புர்ஜ் கலிபா, கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை போல காட்சி அளிக்கும்.

    இந்தநிலையில் மாநில அரசு திருத்தப்பட்ட நினைவிட திட்டத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி உள்ளது. அதில் சத்ரபதி சிவாஜி சிலையின் உயரம் 210 மீட்டராக (சுமார் 689 அடி) அதிகரிக்கப்பட்டுள்ளது.

    தற்போது சீனாவில் லுஸ்கான் கவுன்டி என்ற கோவிலில் தான் புத்தருக்கு 208 மீட்டர் உயரத்தில் சிலை உள்ளது. இதுதான் உலகிலேயே உயரமான சிலையாகும். எனவே உலகிலேயே உயரமான சிலை என்ற பெருமையை அடைய சத்ரபதி சிவாஜி சிலையின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சத்ரபதி சிவாஜி நினைவிட கமிட்டி தலைவர் வினாயக் மேத்தே கூறியதாவது:-

    உயரமான சிவாஜி சிலை வைக்க நாங்கள் விரும்புகிறோம். எனவே தான் ஒப்பந்தம் விடப்பட்ட பிறகு மாற்றுத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சிவாஜி மகாராஜாவிற்கு மிக பிரமாண்டமான நினைவிடம் அமைப்பதற்கான அனைத்து வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சத்ரபதி சிவாஜி நினைவிட பணிகள் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி 36 மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×