search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அக்டோபர், நவம்பர் மாதங்களில் சேது பாலம் பற்றி ஆய்வு
    X

    அக்டோபர், நவம்பர் மாதங்களில் சேது பாலம் பற்றி ஆய்வு

    சேது பாலம் பற்றி அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சில் ஆய்வு நடத்துகிறது.
    புதுடெல்லி:

    தமிழக-இலங்கை கடல் பகுதிக்கு இடையே ராமர் பாலம் எனப்படும் சேது பாலம் இருக்கிறது. அந்த பாலம், ராம பிரான் இலங்கைக்கு செல்வதற்காக வானர சேனைகளும், அவருடைய வீரர்களும் கட்டியது என்று ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அது இயற்கையாக உருவானது என்று மற்றொரு சாரார் கூறுகின்றனர்.

    இந்த வழியாக சேது சமுத்திர கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட இருந்தபோது, சர்ச்சை எழுந்தது.

    இந்நிலையில், சேது பாலம் இயற்கையாக உருவானதா அல்லது மனிதர்களால் உருவாக்கப்பட்டதா என்பதை கண்டறிய ஆய்வு நடத்தப்பட உள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் முக்கிய ஆராய்ச்சி அமைப்பான இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சில் இந்த ஆய்வை நடத்துகிறது.

    இதுகுறித்து அதன் தலைவர் ஒய்.சுதர்சன் ராவ் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்த ஆய்வை நடத்துவோம். இந்த ஆய்வில், இந்திய அகழ்வாராய்ச்சி அமைப்பின் அகழ்வாராய்ச்சி நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கடல்சார் நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இடம்பெறுவார்கள். இதற்காக பல்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்து மேற்கண்டவர்களை தேர்வு செய்வோம்.

    இதுதொடர்பாக மே, ஜூன் மாதங்களில், பெருங்கடல் அகழாய்வு குறித்த 2 வார கால பயிலரங்கம் நடத்துவோம். அதில், திறமையான அறிஞர்கள் மற்றும் மாணவர்களை அடையாளம் கண்டறிவோம்.

    இந்த ஆய்வு முழுக்க முழுக்க எங்களது தனிப்பட்ட ஆய்வாகும். தேவைப்பட்டால், மத்திய அரசை அணுகுவோம். எங்களின் ஆராய்ச்சி, மற்றவர்களுக்கு உந்துதலாக அமையக்கூடும். மத்திய அரசு கூட இதை முன்னெடுத்துச் செல்ல முன்வரக்கூடும்.

    எங்கள் ஆராய்ச்சி முடிவை ராமாயண கருத்துடன் ஒப்பிட்டு பார்க்க நாங்கள் விரும்பவில்லை. அகழாய்வு ரீதியாக இதை அணுகுவதுதான் எங்கள் நோக்கம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×