search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு தற்போது விலக்கு அளிக்க முடியாது: மத்திய மந்திரி தகவல்
    X

    நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு தற்போது விலக்கு அளிக்க முடியாது: மத்திய மந்திரி தகவல்

    நீட் எனப்படும் மருத்துவ பொது நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு தற்போது விலக்கு அளிக்க முடியாது என மத்திய மந்திரி நட்டா தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு நாடு முழுவதும் ‘நீட்’ எனப்படும் பொது நுழைவுத்தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. சில மாநிலங்களுக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்து இருந்தது.

    ஆனால் இந்த ஆண்டு நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ‘நீட்’ தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி மே 7-ந் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று சி.பி.எஸ்.இ. கடந்த மாதம் அறிவித்தது. இதற்காக மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு இந்த ஆண்டும் விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

    தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தபோது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். நீட் தேர்வு ரத்து தொடர்பான தமிழக சட்டமன்ற தீர்மானத்திற்கும் ஒப்புதல் அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.



    இந்நிலையில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் டெல்லியில் இன்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டாவை சந்தித்து நீட் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். அப்போது, தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.

    தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது குறித்து மத்திய சட்ட அமைச்சகத்தில் ஆலோசனை நடத்துவதாக கூறிய மத்திய மந்திரி நட்டா, தற்போது தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது எனத் கூறியுள்ளார்.
    Next Story
    ×