search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி.யில் கடந்த ஆண்டு பிரதமர் மோடியை கொல்ல ஐ.எஸ்.தீவிரவாதிகள் முயற்சி
    X

    உ.பி.யில் கடந்த ஆண்டு பிரதமர் மோடியை கொல்ல ஐ.எஸ்.தீவிரவாதிகள் முயற்சி

    உத்தரப் பிரதேசத்தில் கடந்த ஆண்டு பிரதமர் மோடியை கொல்ல முயன்ற ஐ.எஸ்.தீவிரவாதிகளின் முயற்சி பலத்த பாதுகாப்பால் முறியடிக்கப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது.

    போபால்:

    மத்தியபிரதேச மாநிலம் சாஜபூரில் கடந்த 7-ந் தேதி போபால்- உஜ்ஜைனி பாசஞ்சர் ரெயிலில் குண்டு வெடித்தது. இதில், 7 பேர் காயம் அடைந்தனர்.

    இந்த ரெயிலில் குண்டு வைத்தது ஐ.எஸ். தீவிரவாதிகள் என்று தெரிய வந்தது.

    இதில் சம்பந்தப்பட்ட முகமது ஹைபுல்லா என்ற தீவிரவாதி லக்னோவில் பதுங்கி இருந்த போது, கடந்த 11-ந் தேதி போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டான். மேலும் டேனிஸ் அக்தர், சயித் மிர் உசேன், அதிப் முஸ்தபா ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    அவர்களிடம் சிறப்பு புலனாய்வு படையினர் வீசாரணை நடத்தி வந்தனர். அப்போது அவர்கள் கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியை கொல்வதற்கு முயற்சித்ததாக கூறினார்கள்.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 11-ந் தேதி மாலையில் உத்தரபிரதேசம் லக்னோவில் உள்ள ராம லீலா மைதானத்தில் நடந்த தசரா விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.


    இங்கு குண்டு வைப்பதற்கு அவர்கள் முயற்சித்துள்ளனர். இதற்காக பைப் வெடிகுண்டு தயாரித்து 2 நாட்களுக்கு முன்பு அந்த மைதானத்துக்கு எடுத்து சென்றுள்ளனர். ஆனால், அங்கு பலத்த பாதுகாப்பு இருந்ததால் அவர்களால் குறிப்பிட்ட இடத்தில் வெடிகுண்டை வைக்க முடியவில்லை.

    எனவே, அங்கிருந்து திரும்பி வந்தனர். பிரதமர் நிகழ்ச்சி நடந்த மைதானத்தின் அருகே இன்னொரு மைதானம் உள்ளது. அங்கு அந்த வெடிகுண்டை வைத்தார்கள். பிரதமர் கூட்டம் நடக்கும் அதே நேரத்தில் இந்த வெடிகுண்டு வெடிக்கும் வகையில் வைத்து இருந்தனர்.

    பிரதமர் நிகழ்ச்சி நடக்கும் போது இந்த குண்டு வெடித்தால் மக்களிடம் பீதி ஏற்பட்டு பிரச்சினை ஏற்படும் என்று கருதினார்கள்.

    மறுநாள் பத்திரிகைகளிலும், டி.வி.க்களிலும் இந்த செய்தி வெளிவரும் என்று அவர்கள் காத்திருந்து பார்த்தனர். ஆனால், அப்படி ஒரு செய்தி வரவே இல்லை.

    எனவே, 3 நாட்கள் கழித்து அவர்கள் வெடிகுண்டு வைத்திருந்த இடத்துக்கு சென்று பார்த்தார்கள். அப்போது குண்டு வெடித்து இருந்தது. ஆனால், போதிய சத்தத்துடன் வெடிக்காமல் புகைந்த நிலையில் சாதாரணமாக வெடித்து இருக்கிறது. எனவே, அது யாருக்கும் தெரியவில்லை. சத்தமும் கேட்கவில்லை. இதனால்தான் மக்களிடம் பீதி ஏற்படாமல் இருந்திருக்கிறது. தீவிரவாதிகள் அதே நாளில் கான்பூரில் ரெயில் தண்டவாளத்தில் ஒரு குண்டை வைத்திருந்தனர். அந்த குண்டும் வெடிக்கவில்லை.

    மத்திய பிரதேசத்தில் ரெயிலில் குண்டு வெடிப்பதற்கு முன்பாக கான்பூரில் 4 தடவை வெடிகுண்டை வெடிக்க செய்து சோதனை நடத்தி உள்ளனர். இந்த அனைத்து இடங்களுக்கும் தீவிரவாதிகள் 3 பேரையும் போலீசார் நேரடியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    Next Story
    ×