search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் மதரசா ஆசிரியர் படுகொலை தொடர்பாக 3 பேர் கைது
    X

    கேரளாவில் மதரசா ஆசிரியர் படுகொலை தொடர்பாக 3 பேர் கைது

    கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தில் 30 வயது மதிக்கத்தக்க மதரசா ஆசிரியர் துடிதுடிக்க கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்றுபேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    திருவனந்தபுரம்:

    கர்நாடக மாநிலத்தில் உள்ள மடிக்கேரி மாவட்டத்தை சேர்ந்தவர், ரியாஸ் மவுலவி. சுமார் முப்பது வயது மதிக்கத்தக்க இவர் கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தின் சூரி பகுதியில் இயங்கிவரும் அரபு மொழி பாடசாலையில் (மதரசா) ஆசிரியராக பணியாற்றியபடி, அருகாமையில் வசித்து வந்தார்.

    இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை நள்ளிரவுக்கு பின்னர் இவரது வீட்டுக்கு வந்த அடையாளம் தெரியாத ஒரு கும்பல், உள்ளே தூங்கி கொண்டிருந்த ரியாஸ் மவுலவியை கற்களால் அடித்து படுகாயப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடி கொண்டிருந்த அவரது மரண ஓலம் கேட்டு அக்கம்பக்கத்து வீடுகளில் வசிக்கும் சிலர் உதவிக்கு ஓடி வந்தனர். உடனடியாக ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் செல்லப்பட்ட அவரது உயிர் வழியிலேயே பிரிந்தது.

    இந்த சம்பவத்தால் சூரி பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. கலவரம் போன்ற அசம்பாவித சம்பவங்களை தடுக்க அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த படுகொலை தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவரும் நிலையில் இச்சம்பவத்தை கண்டித்து காசர்கோடு மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்த கேரள மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அழைப்பு விடுத்தது.

    காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளும் இந்த முழு அடைப்பில் பங்கேற்றன. இதையடுத்து, இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய நிதின், அப்பு (எ) அஜேஷ் மற்றும் அகில் ஆகிய மூன்றுபேரை நேற்று மாலை போலீசார் கைது செய்தனர். இன்று அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, விசாரணை காவலில் எடுக்க தனிப்படையினர் தீர்மானித்துள்ளனர்.

    Next Story
    ×