search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கால்நடை வெட்டும் கூடம், இறைச்சி கடைகளுக்கு தடை - உ.பி.யில் அசைவப் பிரியர்கள் திண்டாட்டம்
    X

    கால்நடை வெட்டும் கூடம், இறைச்சி கடைகளுக்கு தடை - உ.பி.யில் அசைவப் பிரியர்கள் திண்டாட்டம்

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பை சமீபத்தில் ஏற்றுக்கொண்ட பா.ஜ.க. அரசு ஆடு, மாடு வெட்டும் கூடங்கள் மற்றும் லைசென்ஸ் இல்லாத கடைகளுக்கு சீல் வைத்துள்ளதால் அங்கு வாழும் அசைவப் பிரியர்கள் பெரும் திண்டாட்டத்துக்குள்ளாகி இருப்பதாக தெரியவந்துள்ளது.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்த பா.ஜனதா தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல்-மந்திரி இருக்கையில் அமர்ந்த யோகி ஆதித்யநாத் முதல் கட்டமாக முந்தைய ஆட்சியில் அகிலேஷ் யாதவ் நியமித்த அரசு சார்பற்ற நியமனங்களை ரத்து செய்தார்.

    அடுத்தக்கட்டமாக மாட்டிறைச்சி கடைகள் தொடர்பாக நடவடிக்கையில் இறங்கி உள்ளார். உத்தரப்பிரதேசத்தில் அனுமதி இல்லாமல் ஏராளமான மாட்டிறைச்சி கடைகள் செயல்படுகின்றன. மேலும் அனுமதி பெற்ற கடைகள் அவற்றுக்கான அனுமதியை நீண்ட காலமாக புதுப்பிக்காமலும் செயல்படுகின்றன. இவை ஒழுங்குப்படுத்தப்படும் என்று பா.ஜனதா வாக்குறுதி அளித்து இருந்தது.

    அதன்படி, லக்னோ நகரில் இயங்கிவந்த ஆடு, மாடுகளை வெட்டும் இரு கூடங்கள் சமீபத்தில் சீல் வைக்கப்பட்டன. முன் அனுமதி இன்றியும், லைசென்ஸ் புதுப்பிக்காமலும் இயங்கி வந்த கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.



    மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இறைச்சி கடைகள் அடைக்கப்பட்டு, வியாபாரிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால், விசேஷநாள் மற்றும் விருந்தினர்களை உபசரிக்க இயலாமல் அங்கு வாழும் அசைவப் பிரியர்கள் பெரும் திண்டாட்டத்துக்குள்ளாகி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    குறிப்பாக, லக்னோ நகரில் மட்டும் உள்ளாட்சி நிர்வாகத்தின் அனுமதியுடன் அறுநூறுக்கும் அதிகமான இறைச்சி கடைகள் இயங்கி வருகின்றன. இதில் சரிபாதிக்கும் அதிகமான கடைகள் தங்களது லைசென்ஸ், தடையின்மை சான்றிதழ் ஆகியவற்றை புதுப்பித்து கொள்ளாமல் இயங்கி வந்ததால் முன்னூறுக்கும் அதிகமான கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீதமுள்ள கடைகளும் மூடப்பட்டுள்ளதால் இறைச்சி பிரியர்கள் மீன், முட்டை போன்ற அசைவ உணவுகளை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    உத்தரப்பிரதேசம் மாநில சட்டத்தின்படி, இறைச்சி கடைகளை நடத்த ஆண்டு கட்டணமாக அரசுக்கு 1200 ரூபாய் செலுத்த வேண்டும். மேலும், அந்த கடை அதன் உரிமையாளருக்கு சொந்தமான கட்டிடமாக இருக்க வேண்டும்.

    சுகாதார அம்சங்களாக கழிவு நீரை அகற்றும் அகன்ற சாக்கடை வசதி, கண்ணாடி கதவுகள் மற்றும் சுத்தமான தரை ஆகிய நிபந்தனைகளையும் இறைச்சி கடைக்காரர்கள் முறையாக பின்பற்ற வேண்டும்.

    இந்நிலையில் சீல் வைக்கப்பட்ட பல கடைகளின் உரிமையாளர்கள் தங்களது உரிமத்தை புதுப்பித்து கொள்ள தற்போது லக்னோ நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட தொடங்கியுள்ளனர்.
     
    இதுதவிர, இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு 13,14,158 மெட்ரிக் டன் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.26,681 கோடியாகும். இதில் பாதி அளவு உத்தரப்பிரதேசத்தில் இருந்துதான் ஏற்றுமதியாகிறது. இந்த ஏற்றுமதிக்கு தடை விதிக்கவும் உ.பி. அரசு தீர்மானித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×