search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் மேலும் 3 இடங்களில் ‘நீட்’ தேர்வு: பிரகாஷ் ஜவடேகர்
    X

    தமிழகத்தில் மேலும் 3 இடங்களில் ‘நீட்’ தேர்வு: பிரகாஷ் ஜவடேகர்

    தமிழ்நாட்டில் நெல்லை, வேலூர், நாமக்கல் உள்ளிட்ட மேலும் 3 நகரங்களில் ‘நீட்’ தேர்வு நடைபெறும் என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    மருத்துவக்கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு நாடு முழுவதும் ‘நீட்’ எனப்படும் நுழைவுத்தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. சில மாநிலங்களுக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்து இருந்தது.

    ஆனால் இந்த ஆண்டு நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ‘நீட்’ தேர்வு கட்டாயம் நடைபெறும் என்றும் மத்திய அரசு, அறிவித்தது. அதன்படி மே 7-ந் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று சி.பி.எஸ்.இ கடந்த மாதம் அறிவித்தது.

    நாடு முழுவதும் 80 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 80 நகரங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டது. அதில் தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய 5 நகரங்கள் இடம் பெற்று இருந்தது.

    நீட் தேர்வுக்கு தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

    தமிழகத்தில் நீட் தேர்வு இல்லாமல் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இதனால் கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் மருத்துவபடிப்பில் சேர முடிகிறது. ஆனால் நீட் தேர்வு சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படுவதால் அது கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் என்று அனைத்து கட்சிகளும் போராட்டம் நடத்தின.


    மேலும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் சென்னை வந்த போது அவரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் சந்தித்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.

    எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று இருந்த போது பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகளை நேரில் சந்தித்தும் கோரிக்கை விடுத்தார்.

    இந்த நிலையில் தமிழ் நாட்டில் இந்த ஆண்டு நெல்லை, வேலூர், நாமக்கல் ஆகிய மேலும் 3 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறும் என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தனது டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.

    நாடு முழுவதும் 80 நகரங்கள் தவிர மேலும் 23 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறும் என்று அவர் அறிவித்தார். அந்த 23 நகரங்களில் தமிழகத்தில் நெல்லை, வேலூர், நாமக்கல் ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளது.

    இதன் மூலம் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கேட்ட தமிழகத்தின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது தெரிய வந்துள்ளது.

    நீட் தேர்வு மே 7-ந்தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. மார்ச் 1-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

    ஆனால் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்ததால் தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்படுமா? என்பது குறித்து தெளிவான, உறுதியான முடிவு எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.

    விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு மார்ச் 1-ந் தேதியுடன் முடிவடைந்த நிலையில் மத்திய அரசு மேலும் 3 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவித்து இருப்பது தமிழக மாணவர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது.
    Next Story
    ×