search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா மரணம்: சசிகலாவை விமர்சித்து குவியும் கடிதங்கள்
    X

    ஜெயலலிதா மரணம்: சசிகலாவை விமர்சித்து குவியும் கடிதங்கள்

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் நிலவும் சர்ச்சைக்குரிய கேள்விகளை தொடர்புபடுத்தி வரும் கடிதங்களை கண்டு சசிகலா அதிர்ச்சியும் வேதனையும் அடைந்திருப்பதாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    பெங்களூர்:

    முறைகேடாக சொத்து குவித்த வழக்கில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த தண்டனையை அனுபவிப்பதற்காக அவர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் அடைக்கப்பட்டுள்ள செல்லில் அவரது உறவினர் இளவரசியும் உள்ளார்.

    சசிகலாவை அவரது உறவினர்கள் தவிர மற்ற யாரையும் சந்தித்து பேச சிறை நிர்வாகத்தினர் தடை விதித்துள்ளனர். இதன் காரணமாக பெங்களூர் சிறைக்கு அ.தி.மு.க.வினர் படையெடுப்பது முற்றிலுமாக குறைந்துள்ளது.

    இதையடுத்து அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் சசிகலாவுக்கு கடிதம் எழுதி அனுப்புகிறார்கள். “சசிகலா, மத்திய சிறை,பரப்பன அக்ரஹாரா, பெங்களூர்- 560100” என்ற முகவரியிட்டு அந்த கடிதங்கள் அனுப்பப்படுகின்றன. தினமும் சசிகலா பெயருக்கு சுமார் 100 முதல் 150 கடிதங்கள் வரை வருகின்றன.

    கடந்த மாதம் 15-ந் தேதி முதல் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு இந்த 36 நாட்களில் சுமார் 6 ஆயிரம் கடிதங்கள் வரை வந்துள்ளது. இந்த கடிதங்களில் பெரும்பாலான கடிதங்கள் சசிகலாவை விமர்சனம் செய்து வருவதாக தெரிய வந்துள்ளது.



    சில கடிதங்கள் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் நிலவும் சர்ச்சைக்குரிய கேள்விகளை தொடர்புபடுத்தி வருவதாக கூறப்படுகிறது. இத்தகைய விமர்சன கடிதங்களை கண்டு சசிகலா அதிர்ச்சியும், வேதனையும் அடைந்து இருப்பதாக பெயர் வெளியிட விரும்பாத சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    முதலில் இத்தகைய கடிதங்களை சசிகலா தம் கைப்பட பிரித்து படித்து வந்தார். தற்போது அவர் கடிதங்களை படிப்பதை நிறுத்தி விட்டார்.



    இதனால் சசிகலா பெயரில் வரும் கடிதங்களை இளவரசி பிரித்து படிக்க தொடங்கியுள்ளார். முக்கிய கடிதங்களை மட்டுமே அவர் சசிகலாவிடம் கொடுக்கிறார்.

    கடுமையாக விமர்சனம் செய்து வரும் கடிதங்களை இளவரசியே கிழித்து விடுகிறாராம்.

    Next Story
    ×