search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி. முதல்-மந்திரி தேர்வில் ஆர்.எஸ்.எஸ். தலையிடவில்லை: வெங்கையாநாயுடு மறுப்பு
    X

    உ.பி. முதல்-மந்திரி தேர்வில் ஆர்.எஸ்.எஸ். தலையிடவில்லை: வெங்கையாநாயுடு மறுப்பு

    உ.பி. முதல்-மந்திரி தேர்வில் ஆர்.எஸ்.எஸ். தலையிடவில்லை என்று மத்திய மந்திரியும், உத்தரபிரதேசத்தின் மேலிட பார்வையாளருமான வெங்கையாநாயுடு மறுப்பு தெரிவித்துள்ளார்.

    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதா அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்ததையடுத்து முதல்-மந்திரியாக யோகி ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக் கொண்டார்.

    உத்தரபிரதேச முதல்-மந்திரியாக வேறொரு நபரை தேர்வு செய்ய பிரதமர் மோடி விரும்பியதாகவும், ஆனால் ஆர்.எஸ்.எஸ். தலையீட்டால் யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

    இதுசம்மந்தமாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் கருத்து வெளியிட்டு இருந்தார். ஆர்.எஸ்.எஸ். விருப்பப்படி யோகி ஆதித்யநாத்தை முதல்-மந்திரியாக தேர்வு செய்துஇருக்கிறார்கள். மக்கள் அளித்த தீர்ப்புக்கு மாறாக பாரதிய ஜனதா நடந்து கொண்டிருக்கிறது என்று கூறியிருந்தார்.


    இதற்கு மத்திய மந்திரியும், உத்தரபிரதேசத்தின் மேலிட பார்வையாளருமான வெங்கையாநாயுடு மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    நாங்கள் மக்களின் தீர்ப்பை ஏற்று அதற்கு ஏற்றாற்போல்தான் முதல்-மந்திரியை தேர்வு செய்து இருக்கிறோம். இதில் மக்கள் எண்ணங்களுக்கு மாறாக எதையும் செய்யவில்லை. முதல்-மந்திரியாக யாரை தேர்வு செய்யலாம் என்பது குறித்து கட்சி விதிகள்படி எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

    முதலில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் முதல்-மந்திரி தேர்வு பற்றி முழுமையாக விவாதிக்கப்பட்டது. எம்.எல்.ஏ.க்கள் கூறிய கருத்துக்களை தேசிய தலைவர் அமித்ஷாவிற்கு கொண்டு சென்றோம். பின்னர் நான் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை மீண்டும் நடத்தினேன். அதில் சுரேஷ்கண்ணா யோகி ஆதித்யநாத் பெயரை முன்மொழிந்தார். அதைத்தொடர்ந்து 9 பேர் வழிமொழிந்தனர்.

    இதன்பின்னர் தான் யோகி ஆதித்யநாத்தை முதல்-மந்திரியாக நாங்கள் தேர்வு செய்தோம். இந்த வி‌ஷயத்தில் ஆர்.எஸ்.எஸ். தலையிடவே இல்லை. மாநில வளர்ச்சியை கருதி யோகி ஆதித்யநாத்தை முதல்-மந்திரியாக தேர்வு செய்திருக்கிறோம்.

    அவர், நான் எந்த பாகுபாடும் இல்லாமல் மாநில வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு பணியாற்றுவேன் என்று கூறியிருக்கிறார். அவர் 22 ஆண்டுகளுக்கு முன்பே தனது குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து சமூக சேவைப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அவர் ஒருபோதும் ஜாதி ரீதியாகவோ, மத ரீதியாகவோ பணியாற்ற வாய்ப்பு இல்லை.

    இவ்வாறு வெங்கையாநாயுடு கூறினார்.

    Next Story
    ×