search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது மந்திரிகள் ‘ஆப்சன்ட்’: துணை ஜனாதிபதி வேதனை
    X

    பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது மந்திரிகள் ‘ஆப்சன்ட்’: துணை ஜனாதிபதி வேதனை

    பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது பதில் அளிப்பதற்கு துறைசார்ந்த மத்திய மந்திரிகள் அவையில் இல்லாமல் போனது தொடர்பாக துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி வேதனை தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது பதில் அளிப்பதற்கு துறைசார்ந்த மத்திய மந்திரிகள் அவையில் இல்லாமல் போனது தொடர்பாக துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி வேதனை தெரிவித்துள்ளார்.

    வழக்கமாக, பாராளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறும்போது நாட்டில் நிலவும் முக்கிய பிரச்சனைகள், அசம்பாவித சம்பவங்கள் மற்றும் சில வளர்ச்சி திட்டங்களின் தற்போதைய நிலை ஆகியவற்றை மத்திய அரசிடம் இருந்து அறிந்து கொள்வதற்காக எம்.பி.க்கள் கேள்வி எழுப்புவது வழக்கம்.

    பாராளுமன்ற அலுவல் ஆய்வுக்குழுவிடம் எழுத்து மூலமாக சமர்ப்பிக்கப்படும் இதுபோன்ற கேள்விகளுக்கு அந்தந்த துறைசார்ந்த மந்திரிகள் உரிய விளக்கங்களை பதிலாக பதிவு செய்வதுண்டு. சில வேளைகளில் அந்த பதில்களுக்கு தகுந்தவாறு துணை கேள்விகளும் எழுப்பப்படும்.



    அவ்வகையில், பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரம் வந்தபோது பதில் அளிப்பதற்கு கப்பல் போக்குவரத்து, சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி துறைசார்ந்த மந்திரிகள் அவையில் இல்லாமல் போனது தொடர்பாக மாநிலங்களவை சபாநாயகரும் துணை ஜனாதிபதியுமான ஹமித் அன்சாரி வேதனை தெரிவித்தார்.

    இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க யாருமில்லாததால் அந்த கேள்விகளை கேள்வி நேர அலுவல் குறிப்பில் இருந்து நீக்கிய ஹமித் அன்சாரி, கேள்வி கேட்டவரும் அவையில் இல்லை, பதில் அளிக்க வேண்டிய மந்திரியும் இங்கு இல்லை. இது இந்த அவைக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இல்லை என அவர் அதிருப்தி தெரிவித்தார்.

    அப்போது, இடையில் எழுந்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், இது முதல்கட்டம்தான், அடுத்தடுத்த கட்டங்கள் எப்படி போகுமோ, தெரியவில்லை என கிண்டல் அடித்தார்.

    அதற்குள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த சில எம்.பி.க்கள், ‘இதுதான் அதிகமான மந்திரிகள் - குறைவான ஆட்சி நடைமுறை கொண்ட அரசாங்கம்’ என்று குரல் கொடுத்தன. இதனால் அவையில் எழும்பிய சிரிப்பலை அடங்க வெகு நேரமானது.

    Next Story
    ×