search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணிப்பூர் சட்டசபை சபாநாயகராக கேம்சந்த் சிங் தேர்வு
    X

    மணிப்பூர் சட்டசபை சபாநாயகராக கேம்சந்த் சிங் தேர்வு

    மணிப்பூரில் பா.ஜ.க. ஆட்சிக்கு நம்பிக்கை கோரும் தீர்மானத்தின்மீது இன்று பலப்பரீட்சை நடைபெறவுள்ள நிலையில் சட்டசபையின் புதிய சபாநாயகராக யும்நாம் கேம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    இம்பால்:

    சமீபத்தில் நடந்து முடிந்த மணிப்பூர் சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க தேவையான தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

    மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் காங்கிரஸ் 28 இடங்களிலும், பா.ஜனதா 21 இடங்களிலும் வெற்றி பெற்றது. நாகலாந்து மக்கள் முன்னணி 4 தொகுதியிலும், தேசிய மக்கள் கட்சி 4 தொகுதியிலும், லோக்ஜன சக்தி திரிணாமுல் காங்கிரஸ், சுயேச்சை தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன.

    காங்கிரசுக்கு ஆட்சி அமைக்க இன்னும் 3 இடங்களே தேவை என்ற நிலையில் சிறிய கட்சிகள் ஆதரவை பெற முடியவில்லை. அந்த கட்சிகள் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்தன. இதன் மூலம் பா.ஜனதாவின் பலம் 33 ஆக உயர்ந்தது.

    இதைத் தொடர்ந்து தலைநகர் இம்பாலில் நடந்த பா.ஜனதா எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டசபை கட்சித் தலைவராக (முதல்-மந்திரியாக)பிரேன் சிங் தேர்வு செய்யப்பட்டார். கவர்னர் நஜ்மா ஹெப் துல்லாவை சந்தித்து ஆதரவு எம்.எல்.ஏக்கள் பட்டியலை கொடுத்து ஆட்சி அமைக்க அவர் உரிமை கோரினார்.

    இதை கவர்னர் ஏற்றுக்கொண்டு பிரேன் சிங்கை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். இதையடுத்து, இம்பாலில் உள்ள கவர்னர் மாளிகையில் கடந்த 15-ம் தேதி மணிப்பூர் முதல்-மந்திரியாக பிரேன்சிங் பதவி ஏற்றார்.

    தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த ஜாய் குமார் துணை முதல் மந்திரியாக பதவி ஏற்று கொண்டார். அவரை தொடர்ந்து இதர இலாகாக்களுக்கான மந்திரிகளும் பதவி ஏற்றனர். அவர்கள் அனைவருக்கும் கவர்னர் நஜ்மா ஹெப்துல்லா பதவி பிரமாணமும், ரகசிய காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார்.

    இந்நிலையில், கவர்னரின் முந்தைய அறிவுறுத்தலின்படி தனது தலைமையிலான மந்திரிசபைக்கு இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை நிரூபிக்க மார்ச் 20-ம் தேதி சட்டசபையில் பலப்பரீட்சை நடத்த முதல் மந்திரி பிரேன் சிங் தீர்மானித்தார்.

    அதன்படி, இன்று காலை சட்டசபை கூடியது. முன்னதாக, எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கூடி குரல் வாக்கெடுப்பின் மூலம் புதிய சபாநாயகரை தேர்வு செய்தனர். சிங்ஜமேய் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற யும்நாம் கேம்சந்த் சிங் புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.

    பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அவரை அழைத்து சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.

    இன்று நடைபெறும் பலப்பரீட்சையில் பா.ஜ.க. அரசு வெற்றி பெற்றால் 28 எம்.எல்.ஏ.க்களை பெற்றுள்ள காங்கிரஸ் எதிர்க்கட்சியாக பணியாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×