search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா நியமனத்துக்கு எதிரான வழக்கில் தினகரன் பதிலை ஏற்க மறுத்தது தேர்தல் ஆணையம்
    X

    சசிகலா நியமனத்துக்கு எதிரான வழக்கில் தினகரன் பதிலை ஏற்க மறுத்தது தேர்தல் ஆணையம்

    சசிகலா நியமனத்துக்கு எதிரான புகார் தொடர்பாக டி.டி.வி.தினகரன் அளித்த பதிலை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்து விளக்கம் கேட்டுள்ளது.
    புதுடெல்லி:

    அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைந்ததையடுத்து, புதிய பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். பின்னர் கட்சியில் பிளவு ஏற்பட்டநிலையில், அ.தி.மு.க.வின் சட்ட விதிகளை காரணம் காட்டி, சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனத்தை ஏற்கக் கூடாது என ஓ.பன்னீர்செல்வம் அணி தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கும்படி சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

    ஆனால், சசிகலா சிறையில் இருப்பதால் அவருக்குப் பதிலாக கட்சியின் துணைப் பொதுச்செயாளர் டி.டி.வி.தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு பதில் அனுப்பினார்.

    இந்நிலையில் தினகரன் அளித்துள்ள பதிலை ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. அ.தி.மு.க.வில் அவர் அதிகாரப்பூர்வமான எந்த பதவியிலும் இல்லை என்பதால் அவர் கையெழுத்திட்டு அனுப்பிய பதில் கடிதத்தை ஏற்க முடியாது என்றும், அதிகாரப்பூர்வ பதவியில் இருப்பவர்கள் மட்டுமே பதில் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

    மேலும், மார்ச் 10-ம் தேதிக்குள் சசிகலாவின் கையெழுத்திட்ட பதிலை அனுப்ப வேண்டும் என்று மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    தேர்தல் ஆணைய ஆவணங்களில் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள் பட்டியலில், தினகரன் பெயர் இல்லை. எனவே, சசிகலாவோ அல்லது நிர்வாகிகள் பட்டியலில் வேறு ஒரு நிர்வாகியோ பதில் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தற்போது உத்தரவிட்டுள்ளது.

    தேர்தல் ஆணையம் கேட்டபடி உரிய பதில் விரைவில் அனுப்பப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார். மேலும் தினகரன் கட்சியில் உரிய பதவியில் இருக்கிறார் என்பதற்கான கடிதத்தையும் அ.தி.மு.க. அனுப்ப உள்ளது.
    Next Story
    ×