search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோடைகாலத்தையொட்டி திருப்பதியில் பக்தர்களுக்கு குடிநீர் வழங்க புதிய திட்டம்
    X

    கோடைகாலத்தையொட்டி திருப்பதியில் பக்தர்களுக்கு குடிநீர் வழங்க புதிய திட்டம்

    ஜலப்பிரசாதினி திட்டத்தின் மூலமாக திருப்பதியில் பக்தர்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டத்தில் முதன்மைச் செயல் அலுவலர் சாம்பசிவராவ் கூறினார்.
    திருமலை:

    திருப்பதியில் உள்ள தேவஸ்தான அலுவலக பவனில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் செய்தி மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி ரவி, அனைத்துத்திட்ட அதிகாரி முக்தேஸ்வரராவ், என்ஜினீயர் சந்திரசேகர்ரெட்டி, கூடுதல் நிதித்துறை அதிகாரி பாலாஜி, சட்டத்துறை அதிகாரி வெங்கடரமணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் சாம்பசிவராவ் கலந்து கொண்டு பேசினார்.

    கோடை காலத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். பக்தர்களுக்குப் பல்வேறு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். திருப்பதி மத்திய பஸ் நிலையம், கோவிந்தராஜசாமி கோவில் அருகில் உள்ள தேவஸ்தான தங்கும் விடுதிகளில் பக்தர்கள் அதிக அளவில் தங்கி ஓய்வெடுப்பார்கள். அங்கு, பக்தர்களுக்கு ஜலப்பிரசாதினி திட்டத்தின் மூலமாக குடிநீர் வசதி செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்படும்.

    திருப்பதியில் பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அத்துடன் விஷ்ணு நிவாசம், சீனிவாசம், மாதவம் ஆகிய தங்கும் விடுதிகளில் ஜலப்பிரசாதினி திட்டத்தைத் தொடங்க வேண்டும். ஒண்டிமிட்டா கோதண்டராமசாமி கோவிலில் ஸ்ரீராமநவமி விழா மற்றும் பிரம்மோற்சவ விழா ஆகியவை நடைபெற உள்ளன. விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும்.

    திருப்பதி கபிலத்தீர்த்தத்தில் பக்தர்களுக்கு குளியல் அறைகள், உடை மாற்றும் அறைகள் அமைத்துக்கொடுக்கப்படும். கபிலேஸ்வரசாமி கோவிலை அடுத்த நம்மாழ்வார் கோவில் அருகில் காலி மனை உள்ளது. அதில் கொட்டகை அமைத்து, பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். விசாகப்பட்டினம் மாவட்டம் உபமாகா வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 7-ந்தேதியில் இருந்து 15-ந்தேதிவரை நடக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.

    கல்யாண உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்க வேண்டும். திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி கட்டும் பணி நடந்து வருகிறது. அதனை விரைந்து முடிக்க வேண்டும்.

    தெலுங்கானா, ஆந்திராவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான தகவல் மையங்கள் உள்ளன. அதில் 300 ரூபாய் கட்டண தரிசன டிக்கெட் வழங்குவது தொடர்பாக பக்தர்களுக்கும், மக்களுக்கும் விளம்பரம் செய்ய வேண்டும். திருமலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் தங்க வைக்கப்படும் பக்தர்களுக்கு சப்தகிரி ஆன்மிக புத்தகங்களை வழங்க வேண்டும். இந்து தர்ம பிரசார பரி‌ஷத் சார்பில் ஆன்மிக தகவல்களை பக்தர்களுக்கும், மக்களுக்கும் பரப்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×