search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பார் நடனத்துக்கு தடை: மராட்டிய அரசு சட்டத்தை எதிர்த்து நடன அழகிகள் வழக்கு
    X

    பார் நடனத்துக்கு தடை: மராட்டிய அரசு சட்டத்தை எதிர்த்து நடன அழகிகள் வழக்கு

    மராட்டிய மாநிலத்தில் பார் நடனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நடன அழகிகள் வழக்கு தொடந்துள்ளனர்.
    மும்பை:

    மராட்டிய மாநில மது பார்களில் பெண்கள் நடனம் ஆடுவது வழக்கமாக இருந்து வந்தது. ஆண்கள் மது குடித்து கொண்டு இருக்க, நடன அழகிகள் அவர்களை சுற்றி சுற்றி வந்து நடனம் ஆடுவார்கள்.

    இதில், ஆபாசம் இடம் பெறுவதாக கூறி மராட்டிய அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த நடனங்களுக்கு தடை விதித்தது. இதனால் பல லட்சம் நடன அழகிகள் பாதிக்கப்பட்டனர்.

    இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதிகள் அரசு தரப்பிலும், நடன அழகிகள் தரப்பிலும் விசாரித்தனர்.

    பின்னர் பார் நடனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

    ஆனாலும், பார் நடனத்துக்கு மராட்டிய அரசு அனுமதி வழங்கவில்லை. இதை தடுக்கும் வகையில் கடந்த ஆண்டு புதிய சட்டம் ஒன்றை மாநில அரசு பிறப்பித்தது.

    அதில், பெண்களின் கவுரவத்தை குறைக்கும் வகையில் உள்ள ஆபாச நடனங்கள் ஓட்டல் மற்றும் பார்களில் நடத்துவது தடுக்கப்படுகிறது என்று கூறப்பட்டு இருந்தது.


    இப்போது இந்த சட்டத்தை எதிர்த்து நடன அழகிகள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது, நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் வழக்கை ஏற்றுக்கொண்டார்.

    வருகிற 2-ந்தேதி இதன் மீது விசாரணை தொடங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

    நடன அழகிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் மராட்டிய அரசு கொண்டு வந்துள்ள சட்டம் எங்களுடைய தொழிலை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. எந்த ஒரு காரணமும் இல்லாமல் எங்களுடைய வாழ்வாதார தொழிலை தடுத்துள்ளனர்.

    இந்த நடனத்தை நாங்கள் கலாச்சாரமாகவும், பாரம்பரியமாகவும் நடத்தி வருகிறோம். எங்களுடைய தனிப்பட்ட தொழிலை சட்டரீதியாக தடுப்பது தவறானது என்று கூறி உள்ளனர்.

    கோர்ட்டு, மராட்டிய சட்டத்துக்கு தடை விதித்தால் மராட்டிய மது பார்களில் மீண்டும் பெண்களின் நடன நிகழ்ச்சிகள் இடம்பெறும்.
    Next Story
    ×