search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதனப்பள்ளியில் போலி ஆடிட்டர் கைது
    X

    மதனப்பள்ளியில் போலி ஆடிட்டர் கைது

    மதனப்பள்ளியில் போலி ஆடிட்டர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து முக்கிய ஆவணங்கள், தங்கம், வெள்ளி நகைகள், ரொக்கப்பணம், கம்ப்யூட்டர்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஸ்ரீகாளஹஸ்தி:

    மதனப்பள்ளியில் சுபாஷ் சாலையில் போலி ஆடிட்டர் வசித்து வருவதாக திருப்பதி, மதனப்பள்ளியில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. அதன்பேரில், வருமான வரித்துறை அதிகாரிகள் விரைந்து சென்று, போலி ஆடிட்டரின் வீடு, அலுவலகத்தில் அதிரடிச் சோதனை நடத்தினர்.

    அப்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள், தங்கம், வெள்ளி நகைகள், ரொக்கப்பணம், கம்ப்யூட்டர்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மதனப்பள்ளி வருமான வரித்துறை அதிகாரி சத்தியநாராயணா, போலி ஆடிட்டர் மீது மதனப்பள்ளி 2-டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலி ஆடிட்டரை பிடித்து விசாரித்தனர்.

    அவர், மதனப்பள்ளியில் சுபாஷ் சாலையில் வசித்து வரும் ஸ்ரீநாத் (வயது 42) என்று தெரிய வந்தது. அவர், 2009-ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஆடிட்டர் பயிற்சி பெற்றதாக போலி அனுபவ சான்றிதழை வைத்திருந்தார். அந்த அனுபவ சான்றிதழுடன் ஒரு குறியீட்டு நம்பரை இணைத்து, மேற்கண்ட முகவரியில் பெயர் பலகை வைத்து போலியாக ஆடிட்டர் தொழில் செய்து வந்ததாக தெரிய வந்தது. அவர், பல்வேறு நிறுவனங்களுக்கு வரவு-செலவு கணக்குகளை தணிக்கை செய்து கொடுத்துள்ளார்.

    அப்போது சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு போலியான ஆவணங்களை தயார் செய்து வரி ஏய்ப்பு செய்ததாகவும், ரூ.66 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாகவும் தெரிய வந்தது. மேலும் ரூ.88 லட்சத்துக்கு பண மோசடி செய்ய முயன்றதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலி ஆடிட்டர் ஸ்ரீநாத்தை போலீசார் கைது செய்தனர். அவரை, மதனப்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×