search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய பணக்கார நகரங்கள் பட்டியலில் மும்பை முதலிடம்
    X

    இந்திய பணக்கார நகரங்கள் பட்டியலில் மும்பை முதலிடம்

    இந்தியாவின் பணக்கார நகரங்கள் பட்டியலில் மும்பை முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் சென்னை ஏழாவது இடத்தில் இருக்கிறது.
    புதுடெல்லி:

    இந்தியாவின் பணக்கார நகரங்கள் பட்டியலில் மும்பை முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் சென்னை ஏழாவது இடத்தில் இருக்கிறது.

    கோடீஸ்வரர்கள் அதிகம் வாழும் இந்திய நகரங்கள் பற்றி அண்மையில் ஓர் ஆய்வு நடைபெற்றது. தலா 10 லட்சம் டாலர் (சுமார் ரூ.6.60 கோடி) அல்லது அதற்கு அதிகமாக நிகர சொத்து மதிப்பு கொண்ட பணக்காரர்களின் எண்ணிக்கை அடிப்படையில் இந்த நகரங்கள் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன.

    இந்த பட்டியலில் இந்தியாவின் பொருளாதார தலைநகரான மும்பை முதலிடத்தில் உள்ளது. இங்கு 46,000 பெரும் பணக்காரர்கள் மற்றும் 28 மெகா கோடீஸ்வரர்கள் வசிக்கின்றனர். இவர்களுடைய ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 82,000 கோடி டாலராகும். இரண்டாவது இடத்தில் டெல்லியும், மூன்றாவது இடத்தில் பெங்களூருவும் இருக்கின்றன.

    ஆய்வறிக்கை மேலும் கூறுவதாவது:-

    டெல்லியில் 23,000 பெரும் பணக்காரர்களும், 18 மெகா கோடீஸ்வரர்களும் உள்ளனர். இவர்களுடைய சொத்து மதிப்பு மொத்தம் 45,000 கோடி டாலராகும். பெங்களூருவில் 7,700 கோடீஸ்வரர்களும், 8 பெரும் கோடீஸ்வரர்களும் இருக்கின்றனர். இவர்களுடைய நிகர சொத்து மதிப்பு 32,000 கோடி டாலராக உள்ளது.

    பணக்கார நகரங்கள் பட்டியலில் 31,000 கோடி டாலர் சொத்துடன் ஐதராபாத் நான்காவது இடத்தில் இருக்கிறது. இங்கு 9,000 பெரும் பணக்காரர்களும், 6 மெகா கோடீஸ்வரர்களும் உள்ளனர். ஐந்தாவது இடத்தில் இருக்கும் கொல்கத்தாவில் மொத்தம் 9,600 கோடீஸ்வரர்களும், 4 பெரும் கோடீஸ்வரர்களும் இருக்கின்றனர். இவர்களுடைய மொத்த சொத்து மதிப்பு 29,000 கோடி டாலர் ஆகும்.

    இந்த பட்டியலில் பூனா, சென்னை, கூர்கான் ஆகிய நகரங்கள் முறையே 6, 7 மற்றும் 8-வது இடங்களில் உள்ளன. சென்னையில் 6,600 பெரும் பணக்காரர்களும், 4 மெகா கோடீஸ்வரர்களும் இருக்கின்றனர். இவர்களுடைய சொத்து மதிப்பு ஒட்டுமொத்த அளவில் 15,000 கோடி டாலராக உள்ளது.

    மும்பையில் பந்த்ரா, ஜஹு, பரேல், ஒர்லி உள்ளிட்ட 6 பகுதிகள் பெரும் செல்வந்தர்கள் நிறைந்த இடங்களாக இருக்கின்றன. அதுபோல் சென்னையில் போயஸ் கார்டன் மற்றும் போட் கிளப் ரோடு ஆகிய பகுதிகளில் மெகா கோடீஸ்வரர்கள் அதிகம் இருக்கின்றனர்.

    நிகர சொத்து மதிப்பு அடிப்படையில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நகரங்களாக சூரத், அகமதாபாத், விசாகபட்டினம், கோவா, சண்டிகார், ஜெய்ப்பூர், வதோதரா ஆகியவையும் முன்னேறி வருகின்றன.

    இந்தியாவில் இப்போது மொத்தம் 2.64 லட்சம் பெரும் பணக்காரர்களும், 95 மெகா கோடீஸ்வரர்களும் இருக்கின்றனர். ஒட்டுமொத்த அளவில் இவர்களுடைய சொத்து மதிப்பு, 2016 டிசம்பர் இறுதி நிலவரப்படி 6.2 லட்சம் கோடி டாலராக இருக்கிறது.

    இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×